இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்டதாக கூறிய சம்பவத்தினால், இன்று (20) பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற வளாகத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறும் அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகருடன் கலந்துரையாடுவதற்காக சபையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதன்படி, பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, பாராளுமன்ற நூலகத்திற்கு அருகில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார காணொளியாக பதிவு செய்துள்ளார்.
பாராளுமன்ற அறைக்கு வந்து எம்பி தன்னை தாக்கியதாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் டயானா கமகே தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சபாநாயகர் குழுவையும் நியமித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையிலான இந்தக் குழுவில் சமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன, கயந்த கருணாதிலக்க மற்றும் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.