ஈராக்கின் நினிவே மாகாணத்தில் ஹம்தானியா மாவட்டத்தில் புதன்கிழமை (27) திருமண விருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர்.
செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, நினிவே துணை ஆளுநர் ஹசன் அல்-அல்லாக் இறந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உள்ளது என்று கூறினார்.
அரச ஊடகத்தை மேற்கோள் காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது,
கொண்டாட்டத்தின் போது பட்டாசுகள் கொளுத்தப்பட்ட பின்னர், அல்-ஹம்தானியா நகரில் உள்ள ஒரு பெரிய நிகழ்வு மண்டபத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, கட்டிடம் அதிக எரியக்கூடிய கட்டுமானப் பொருட்களால் கட்டப்பட்டதால் விரைவாக தீக்கிரையானது.
ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உள்ளூர் நேரப்படி இரவு 10.45 மணியளவில் (19.45 GMT) தீ விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவத்தின் போது நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி, கூட்டாட்சி ஈராக் அதிகாரிகள் மற்றும் ஈராக்கின் அரை தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தால் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன.