சில நாட்களின் முன்னர் இலங்கை தமிழ் அரசு கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள். இந்த பேச்சின் பின்னர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பையும் நடத்தினார்கள்.
இதன்போது, செம்மணி சிந்துபாத்தி மயான அகழ்வு, பேராசிரியர் ராஜ்சோமதேவவின் இடைக்கால அறிக்கை பற்றி கலந்துரையாடியதாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.
அவர்கள் செய்தியாளர்களிடம் சொல்லாத விடயமொன்றையும் அந்த சந்திப்பில் கலந்துரையாடியுள்ளனர்.
அது- சிறிதரன் எம்.பி விவகாரம்.
இலங்கை தமிழ் அரசு கட்சி- சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஒரு அணியாகவும், சி.சிறிதரன் தலைமையில் இன்னொரு அணியாகவும் இயங்குகிறது, இரு தரப்பும் இணக்கத்திற்கு வருவதற்கான வாய்ப்புக்கள் மிக குறைவு என்பதும் ஊரறிந்த இரகசியம்.
சிறிதரன், சுமந்திரன் மோதலில் யாருமொருவர் விட்டுக்கொடுக்க தயாரில்லை, கட்சி எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லையென்ற விடாப்பிடி மனநிலையிலேயே இருவரும் இருக்கிறார்கள்.
இந்த பின்னணியில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழரசு கட்சி சந்திப்பில், சிறிதரன் விவகாரமும் பேசப்பட்டது.
அடுத்த மாகாணசபை தேர்தல் நடந்தால் இரண்டு தரப்பும் ஒருமித்து தேர்தலை சந்திக்க வேண்டுமென ஒரு முன்மொழிவு வைக்கப்பட்டது. அதற்கு இரு தரப்பும் கொள்கையளவில் உடன்பட்டன. இது பற்றி பின்னர் மேலதிகமாக பேசிக்கொள்ளலாம் என்றளவில் அன்று பேச்சு நின்றது.
இதன்போது, சிறிதரன் தனித்தரப்பாக செயற்படுவதால் உள்ள சாதக, பாதகங்கள் ஆராயப்பட்டன.
சி.சிறிதரன் தென்னிலங்கையில் பதிவு செய்யப்பட்ட சிங்கள அரசியல் கட்சியொன்றை பணம் கொடுத்து வாங்கி விட்டார் என சில காலமாக அரசியல் வட்டாரங்களில் அரசல்புரசலாக பேசப்பட்டு வருகிறது. அதை சிறிதரன் நேரடியாக வாங்கினாரா அல்லது கந்தையா பாஸ்கரன் வாங்கினாரா என்பதில் பலருக்கு குழப்பம் இருந்தது.
தமிழரசு- சங்கு பேச்சிலும் இதுபற்றி விலாவாரியாக பேசப்பட்டது.
சிறிதரன், பாஸ்கரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன ஒரே கூட்டாக மாகாணசபை தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக அங்கு பேசப்பட்டது.
கந்தையா பாஸ்கரன் இதுவரை தனது பண்ணையில் மாதுளம்பழம் சாப்பிட்டும், நுங்கு குடித்தும் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தவர், திடீரென வயதுக்கு வந்தவரை போல- அரசியல் பேசவும், நாட்டு நடப்புக்கள் பற்றி அறிக்கைகள் விடவும், செத்தவீடு, சாமத்திய வீடுகளிற்கு செல்லவும் தொடங்கி விட்டார். இது என்ன வருத்தத்தின் அறிகுறியென்பதை புரிந்துகொள்ள பெரிய அரசியல் ஞானமெல்லாம் தேவையில்லை. பணமிருந்தது, ஃபன் எடுத்தார். இனி அரசியல் ஆசை வந்துவிட்டது. அவ்வளவுதான்.
பாஸ்கரன் நீண்டகாலமாகவே சிறிதரன் தரப்புக்கு பணம் வழங்கி வருகிறார். தேர்தல் சமயங்களில் அவை வழங்கப்படுகின்றன. சிறிதரன் தரப்பு உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கும் ஒருமுறை பாஸ்கரன் பணம் வழங்கியிருந்தார்.
இலங்கை தமிழரசு கட்சியில் பிளவு ஏற்பட்டால் சிறிதரனின் முதல் தெரிவாக- தமிழ் தேசிய மக்கள் முன்னணியே இருக்கிறது. பாஸ்கரனிற்கும் முன்னணியுடன் இப்போது நல்ல உறவு. இந்த அணி கூட்டாக தேர்தலை சந்திக்க இப்பொழுதே திட்டமிட்டு செயற்படுகிறது.
இதற்காகத்தான் சிங்கள அரசியல் கட்சியொன்றை பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையே அன்றைய சந்திப்பில் இரண்டு தரப்பும் பேசிக்கொண்டன. அன்றைய சந்திப்பில் இதுபற்றி பேசிய ஒருவர்- கட்சி வாங்கிய விவகாரத்தின் முழுமையான விபரத்தை தான் பெற்றுள்ளதாகவும் கலந்துரையாடலில் குறிப்பிட்டார். அவரது பெயரை காரணம் கருதி நாம் தற்போது வெளியிடவில்லை.
தமிழ் அரசியல் தரப்புக்களிடையே பல பல பிரிவுகள் ஏற்படுவதால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ள தமிழர்களிற்கு மற்றொரு அதிர்ச்சியாக இன்னொரு அரசியல் அணி விரைவில் தோன்ற எல்லா வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளன.




