ரஷ்ய கடற்படையின் கப்பலை தாக்குவதற்காக உக்ரைன் ட்ரோன்களை அனுப்பிய போது, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது நிறுவனத்தில் உள்ள பொறியாளர்களை அதன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வலையமைப்பை அணைக்க உத்தரவிட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் உக்ரைன் தாக்குதல் சீர்குலைந்தது. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வலையமைப்பை மீள இயக்குமாறு உக்ரைனிய தரப்பில் கெஞ்சிக் கேட்கப்பட்ட போதும், மஸ்க் அதற்கு உடன்படவில்லை.
எலோன் மஸ்க் பற்றிய சுயசரிதை புத்தகத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. வால்டர் ஐசக்சன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த வாரம் புத்தகம் வெளியாகவுள்ளது.
கடந்த ஆண்டு கிரிமியா கடற்கரையில் நிலை கொண்டிருந்த ரஷ்ய கடற்படை போர்க்கப்பலை தாக்க உக்ரைன் முயன்றது.
உக்ரைன் போரில் இணைய வசதி துண்டிக்கப்பட்டதையடுத்து, உக்ரைனியர்களுக்காக இணைய வசதிக்காக, எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மஸ்க் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஐசக்சனிடம், தான் போருக்கு இழுக்கப்படுவதைப் பற்றி கவலைப்படுவதாகக் கூறினார்.
மேலும் இந்த தாக்குதல் “மினி பேர்ல் ஹார்பர்” ஆகிவிடும், ரஷ்ய அணுசக்தி பதிலடி கொடுக்கும் என்று அவர் அஞ்சியதால் செயற்கைக்கோள்களை அணைக்குமாறு SpaceX பொறியாளர்களுக்கு உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.
மஸ்க் செயற்கைக்கோள்களை துண்டித்த பிறகு, உக்ரைனிய ட்ரோன்கள் “இணைப்பை இழந்து தீங்கற்ற முறையில் கரை ஒதுங்கியது” என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.
“ஸ்டார்லிங்க் போர்களில் ஈடுபடுவதற்காக அல்ல. மக்கள் Netflix ஐப் பார்க்கவும், நிதானமாகவும், மாணவர்கள் ஒன்லைனில் படிக்கவும், நல்ல அமைதியான விஷயங்களைச் செய்யவுமே பயன்படுத்தப்படும். ட்ரோன் தாக்குதல்களுக்கு அல்ல.” என கூறியுள்ளார்.
உக்ரைனின் முன்னாள் துணைப் பிரதம மந்திரி மைக்கைலோ ஃபெடோரோவ் செயற்கைக்கோள்களுக்கான அணுகலை மீட்டெடுக்க மஸ்கிடம் “கெஞ்சினார்” என்று ஆசிரியர் தனது புத்தகத்தில் மேலும் கூறினார்.
ஆனால் மஸ்க் கோரிக்கையை மறுத்தார், ட்ரோன் தாக்குதல் “அதிக தூரம் சென்று மூலோபாய தோல்விக்கு அழைப்பு விடுக்கிறது” என்று கூறினார்.
பெப்ரவரி 2022 இல் போரின் தொடக்கத்தில் ரஷ்யாவினால் உக்ரைனின் உள்கட்டமைப்பு அழிக்கப்பட்ட பின்னர் 20,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் டெர்மினல்களை மஸ்க் உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்கினர்.
கடந்த ஒக்டோபரில், பென்டகனுக்கு மஸ்க் கடிதம் எழுதி, இந்தச் சேவையை தொடர முடியாது என்றும், நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் மஸ்க் உடன் பேரம் பேசி, உக்ரைனுக்கு அனுப்பப்படும் மற்றொரு 100,000 Starlink செயற்கைக்கோள் டிஸ்களை அனுப்பி வைத்தன.
இணைய தொடர்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் பற்றி X சமூக ஊடகத்தில் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மஸ்க் பதிலளித்த போது,
“செவாஸ்டோபோல் வரை ஸ்டார்லிங்கை செயல்படுத்துவதற்கு அரசாங்க அதிகாரிகளிடமிருந்து அவசர கோரிக்கை இருந்தது. ரஷ்ய கடற்படையின் பெரும்பகுதியை தரித்து நிற்கும் போதே மூழ்கடிப்பதே வெளிப்படையான நோக்கம். அவர்களின் கோரிக்கைக்கு நான் சம்மதித்திருந்தால், ஸ்பேஸ்எக்ஸ் ஒரு பெரிய போர் மற்றும் மோதல் அதிகரிப்புக்கு வெளிப்படையாக உடந்தையாக இருக்கும்,” என்று குறிப்பிட்டார்.
இந்த தகவல் வெளியானதையடுத்து, உக்ரைனிய அரச பிரமுகர்கள் சமூக ஊடகங்களில் மஸ்க்கை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்கள்.