திறைசேரியில் இருந்து பணம் ஒதுக்கப்படாததால் பணம் வசூலிக்காமல் கல்லூரியை நடத்துவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சட்டக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்விப் பேரவையினால் 2023 மே 15ஆம் திகதி வெளியிடப்பட்ட 2332/02ஆம் இலக்க விசேட வர்த்தமானி தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரிக்கு உள்ளீர்த்துக்கொள்ளப்படுவதற்கான தகுதிகள் குறித்து குழு தனது அக்கறையை வெளிப்படுத்தியது. இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட முன்னர் சட்டமானியைப் பெற்றுக் கொண்டவர்கள் அல்லது சட்டமானிக்காக உள்ளீர்க்கப்பட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பது குழுவின் நிலைப்பாடாக இருந்தது.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் 2023.08.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மாணவர்கள் மீது சுமையை ஏற்றும் வகையில் சட்டக் கல்லூரிக்கான கட்டணத்தை உயர்த்தியதன் அடிப்படை என்ன என்றும் குழு கேள்வி எழுப்பியது. ஏனைய பல்கலைக்கழகங்களைப் போன்று சட்டக் கல்லூரியின் பராமரிப்புக்குத் திறைசேரியிலிருந்து பணம் ஒதுக்கப்படுவதில்லையென்றும், அதிகரித்துள்ள செலவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு கட்டணம் அறவிடாமல் சட்டக்கல்லூரியை நடாத்திச் செல்வது சிரமமானது என இதற்குப் பதிலளித்த சட்டக் கல்லூரியின் அதிபர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் மீது சுமையை அதிகரிக்காது சட்டத்தரணிகளிடமிருந்து உறுப்புரிமைக்கான கட்டணமொன்றை பெற்றுக்கொள்ளும் முன்மொழிவு இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட வேண்டும் என்பது குழுவின் தலைவருடைய நிலைப்பாடாக இருந்தது.
அத்துடன், 2023 ஜனவரி 14ஆம் திகதி நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட 2314/80ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலிலுள்ள ஒழுங்குவிதி மற்றும் 2023 ஏப்ரல் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட 2328/16ஆம் இலக்க வர்த்தமானியிலான கட்டளை என்பன குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், இதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதில் இராஜாங்க அமைச்சர்களான அநுராத ஜயரத்ன, சிசிர ஜயகொடி, அருந்திக பெர்னாந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான கெவிந்து குமாரதுங்க, பிரேம்நாத் சி.தொலவத்த மற்றும் அசோக பிரியந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.