உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலையில், சிறுவன் ஒருவனை கன்னத்தில் அடிக்கும்படி சக மாணவர்களை ஆசிரியரே அழைக்கும் சர்ச்சை வீடியோ வெளியாகியுள்ளது.
அறை வாங்கும் சிறுவன் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்.
மாணவன் வீட்டு பாடத்தை செய்யவில்லை. இதனால் முன்னால் அழைத்த ஆசிரியை திரிப்தி தியாகி, அவரிடம் வாய்பாடு கேட்டார். மாணவனுக்கு சொல்லத் தெரியவில்லை. இதையடுத்தே, சக மாணவர்களின் மூலம் அந்த மாணவனை அறைய வைத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த கொடூரமான சம்பவத்தின் வீடியோ, மாணவர்கள் தங்கள் வகுப்பு தோழனை அறைவதைக் காட்டுகிறது, சிறுவன் அவமானத்துடனும் வலியுடனும் அழுதுகொண்டிருப்பதைக் காட்டுகிறது.
அதே நேரத்தில் திரிப்தா தியாகி என்று அடையாளம் காணப்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியை, மாணவனை தொடர்ந்து அடிக்கும்படி ஊக்கப்படுத்துகிறார்.
அத்துடன், முஸ்லிம் தாய்மார் தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்தாததாலேயே அந்த மாணவர்களின் கல்வி பாழாகிறது என்றும் ஆசிரியர் கூறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
The teacher's name is Tripta Tyagi. She teaches at a primary school in Muzaffarnagar, Uttar Pradesh. She called Muslim kids in front of the class & asked students from other community (Hindu) to slap them.
The rot has settled deep in our society pic.twitter.com/TI9nVrbe7q— Md Sherjahan (@sherjahan_md) August 25, 2023
வகுப்பிலுள்ள முஸ்லிம் மாணவர்களை அழைத்து அந்த மாணவனை அடிக்க வைக்கிறார். ஒரு மாணவன் அடிக்கும்போது, “நீ இன்னும் பலமாக ஏன் அடிக்கக்கூடாது“ என்றும் ஆசிரியை கேட்கிறார்.
‘நியாயம் கிடைக்காது’
பாதிக்கப்பட்டவரின் தந்தை, தனது மகனை பள்ளியில் இருந்து விலக்கிவிட்டதாகவும், பள்ளி நிர்வாகம் தனது குழந்தையின் சேர்க்கைக் கட்டணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பள்ளி அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்ததாக அந்த நபர் கூறினார்.
தியாகிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என்று ஏன் வலியுறுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு, நீதி வழங்கப்படும் என்று தாம் நம்பவில்லை என்றும், எனவே புகார் கொடுப்பது வீணான செயலாகும் என்றும் மாணவனின் தந்தை கூறினார்.
அந்த ஆசிரியை போலீஸ் முன்னிலையில் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலானதை அடுத்து, சம்பவம் குறித்து தாங்கள் அறிந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
“சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அங்கு ஒரு பெண் ஆசிரியர் குழந்தைகளை தங்கள் சக மாணவரை அடிக்கும்படி கேட்கிறார். வீடியோவை நாங்கள் அறிந்துள்ளோம். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த வீடியோ மன்சூர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கப்பர்பூர் கிராமத்தில் உள்ளது. வீடியோவில் காணப்பட்ட பெண் தனது வீட்டிலிருந்து பள்ளியை நடத்துகிறார்” என்று கட்டௌலியின் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ரவிசங்கர் கூறினார்.
“வீட்டுப்பாடம் செய்யாத” காரணத்திற்காக ஆசிரியர் குழந்தையை இந்த இழிவான தண்டனைக்கு உட்படுத்தினார் என்று மூத்த அதிகாரி கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளதாக ஆரம்ப கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது,” என்று அதிகாரி கூறினார், இந்த வழக்கின் குற்றவியல் அம்சத்தை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்வார்கள்.
பாஜக தரப்பு விளக்கம்
இந்த சம்பவத்தில் வகுப்புவாத எண்ணம் எதுவும் இல்லை என்று பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா தெரிவித்துள்ளார்.
இதற்காக போலீஸாரின் அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள அவர், அந்த மாணவர் பெருக்கல் வாய்ப்பாடு படிக்காததற்காகவே அந்தத் தண்டனை வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து மாள்வியா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முஸாபர்நகரில் உள்ள பள்ளியின் ஆசிரியை ஒருவர், வாய்ப்பாட படிக்காத, வீட்டுப்பாடம் செய்யாத மாணவர் ஒருவருக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அம்மாணவரை அடிக்கும் படி சக மாணவரிடம் சொல்லியிருக்கிறார். ஏன் அந்த ஆசிரியர் அவரே எழுந்து சென்று அடிக்காமல், பிறமாணவர்களை அடிக்கச் சொல்லியிருக்கிறார்?. ஊடகங்களால் இதை உறுதிப்படுத்த முடியும்.
ஒரு மாணவரை சக மாணவர்களை வைத்து அடிக்கச் செய்வது என்பது மோசமான சிந்தனைதான் என்றாலும்,எல்லாவற்றையும் சந்தேகத்தோடு பார்ப்பவர்கள் கூறுவது போல் இதில் வகுப்புவாத சிந்தனை எதுவும் இல்லை.
அவர்களின் அக்கறை மாணவரின் நலனை விட அவரது மத அடையாளத்தின் மீத இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. மாணவனைக் காப்பாற்ற முயலாமல், அவர்களின் வெறுப்பு கொள்கையை பரப்பபயன்படுத்துவதற்காக வெட்கப்படுகிறேன். இங்கே போலீஸார் சொல்வதைக் கேளுங்கள்” என்று கூறி போலீஸார் பேசும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.