2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் நவ்பர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஓகஸ்ட் 7 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2வது, 3வது மற்றும் 8வது சந்தேகநபர்க் இரண்டு தனித்தனி வழக்குகளுக்காக கேகாலை மற்றும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டதால், சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற விசாரணைக்கு முற்படுத்த முடியவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை அடுத்த விசாரணைத் திகதியில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதுடன், வழக்கை ஓகஸ்ட் 07 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற ட்ரயல் அட்-பார் ஒத்தி வைத்தது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற வளாகத்தில் பலத்த பொலிஸ் மற்றும் STF பாதுகாப்பு போடப்பட்டு ச்தேகநபர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம், கிங்ஸ்பரி கொழும்பு, ஷாங்கிரிலா கொழும்பு, சினமன் கிராண்ட் கொழும்பு, மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் தெஹிவளை டிராபிகல் இன்ன் உள்ளிட்ட 8 தாக்குதல்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முகமது இப்ராஹிம் முகமது நவ்பர் என்ற நௌபர் மௌலவி, முகமது சரிபு ஆதம் லெப்பை (அபு ஹாடிக்), ஹயாது முகமது மில்ஹான் (அபு ஜில்லா), முகமது இப்ராகிம் சாதிக் அப்துல்லா (அபு உமர்), முகமது இப்ராஹிம் எஃப் அப்துல்லாலா, அன்வர் முகமது ரிஸ்கான் (அபு தாரிக்), முஹம்மது மன்சூர் முகமது சனாஸ்தீன் (அபு மிசான்), அப்துல் மனாஃப் முகமது பிரிதாவூஸ், முகமது ரமிஷ் முகம்மது சாரிக், அப்துல் லத்தீப் முகமது சஃபி (சாபி மௌலவி/அபு ஃபுர்கான்), ஹுசைனுல் ரிஸ்வி முகமது ஸம்ஸ்ஹீர், முஹம்மது காஹிர் சம்ஸ்ஹீர் அபு தாவூத்), முகமது இப்திகார் முகமது இன்சாப் (அபு முகமது), ரஷீத் முகமது இப்ராஹிம், முகமது ஹனிஃபா ஜைனுல் அப்தீன் (அபு ஹினா), முகமது முஸ்தபா முகமது ஹாரிஸ் (அபு நஞ்சியார்), யாசின் பாவா அப்துல் ரவுப், ரசிக் ராசா ஹுசைன், ஜமீன் உசேன், ஜாமீன் முஹம்மது கச்சி மொஹமட் ஜசீன், மொஹமட் முஸ்தபா மொஹமட் ரிஸ்வான், மீரா சஹீத் மொஹமட் நஃப்லி (அபு சனா), மொஹமட் அமீன் அயன்துல்லா, மொஹமட் அன்சார் தீன் ஹில்மி மற்றும் மொஹமட் அக்ரம் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாசின் பாவா அப்துல் ரவூப் பெப்ரவரி 5ஆம் திகதி திடீரென மாரடைப்பால் காலமானதாக நீதிமன்றத்திற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.