தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சோவியத் காலத்தில் கட்டப்பட்ட பரந்த அணையான நோவா ககோவ்கா செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டது.
இதனால் பரந்த பிராந்தியம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அணையை இடித்தது தெடர்பில் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
உக்ரைன் கட்டுப்பாட்டிலுள்ள 16,000 குடியிருப்பாளர்களை வெள்ளம் ‘முக்கிய மண்டலத்திலிருந்து’ வெளியேற்றியதாக தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள் ககோவ்கா அணையைச் சுற்றி தொடர்ச்சியான தீவிர வெடிப்புகளுக்குப் பிறகு அணைக்கட்டு உடைந்து டினிப்ரோ ஆற்றில் நீர் வெளியேறுவதை காட்டுகிறது. மற்ற வீடியோக்கள் அணையின் எச்சங்கள் வழியாக நீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் காட்டுகின்றன.
நோவா ககோவ்கா அணையை அழித்ததன் பின்னணியில் ரஷ்ய படைகள் இருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறுகிறது.
உக்ரேனியப் படைகள் டினிப்ரோ ஆற்றைக் கடப்பதைத் தடுக்க தெற்கு உக்ரைனில் உள்ள நோவா ககோவ்கா அணையை ரஷ்யா தகர்த்தது என்று உக்ரைனின் தெற்கு இராணுவக் கட்டளை கூறுகிறது.
“இது ஒரு வெறித்தனமான எதிர்வினை” என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் நடாலியா ஹுமேனியுக் ஒரு ஒன்லைன் மாநாட்டில் கூறினார்.
உக்ரைன் திட்டமிடும் எதிர்த்தாக்குதலுக்காக டினிப்ரோ ஆற்றைக் கடக்க திட்டமிட்டுள்ள சமயத்தில் அணை உடைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் கூறுகிறது.
அணை வெடிப்புக்குப் பிறகு, நோவா ககோவ்கா மாவட்டத்தில் உள்ளூர் ரஷ்யா ஆதரவு அதிகாரிகளால் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அணை உடைந்ததன் விளைவாக அந்த மாவட்டத்தில் சுமார் 600 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
எனினும் ஷெல் வீச்சில் அணை அழிக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா நகரத்தின் மேயர், ஷெல் தாக்குதலில் அணை உடைந்ததாக தெரிவித்தார்.
கெர்சன் பகுதியில் ரஷ்யாவால் நிறுவப்பட்ட மேயர் விளாடிமிர் சால்டோ வெளியிட்ட வீடியோவில், நாட்டின் கிழக்கில் எதிர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக பிரச்சாரம் செய்யப்பட்டு, அவை தோல்வியடைந்துள்ளதால், திசைதிருப்பும் வகையில் உக்ரைனே நோவா ககோவ்கா அணையைத் தாக்கியதாகக் கூறினார்.
ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனத்தின்படி, உக்ரைனுக்கு பிரித்தானியா வழங்கிய Storm Shadow ஏவுகணைகளால் அப்பகுதியைத் தாக்கியதாகக் கூறியது.
30 மீட்டர் உயரமும் 3.2 கிலோமீட்டர் (சுமார் இரண்டு மைல்) நீளமும் கொண்ட இந்த அணை 1956 ஆம் ஆண்டு டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்டது.
இது குறிப்பிடத்தக்க அளவு தண்ணீரைக் கொண்டுள்ளது. ரொய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இது அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள பெரிய உப்பு ஏரிக்கு சமமான தண்ணீரைக் கொண்டுள்ளது.
A multi-hundred foot chunk of the Nova Kakhovka dam is gone, the Kakhovka Reservoir is quickly emptying out into the Dnipro. pic.twitter.com/265i1nbvAO
— OSINTtechnical (@Osinttechnical) June 6, 2023
நோவா ககோவ்கா அணையானது 2014 இல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட ஒரு பகுதியான கிரிமியாவிற்கும், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கும் தண்ணீர் வழங்குகிறது.




