துப்பாக்கியால் சுட முயன்றவனை நீதிபதியாக்கி, அச்சுறுத்தப்பட்டவரை குற்றவாளியாக்கும் நீதியே இலங்கையில் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் துப்பாக்கி முனையில்தான் அடக்கப்படுவார்கள் என்பதை மீளவும் ஒருமுறை சிங்கள ஆட்சியாளர்கள் நிரூபித்துள்ளனர் என்றார்.
“கஜேந்திரகுமார் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாதென மருதங்கேணி பொலிசார் தாக்கல் செய்த அறிக்கையின்படி, கஜேந்திரகுமாருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
தன் இனத்திற்காக குரல் கொடுத்த மக்கள் பிரதிநிதி அச்சுறுத்தப்பட்டார். அவரை அச்சுறுத்த முயன்றவர்கள் கைது செய்யப்படாமல், அச்சுறுத்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதான் இந்த நாட்டின் நீதியா, சட்டமா என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாமலுள்ளது.
இதுதான் கடந்த காலங்களிலும் இந்த மண்ணில் நடந்துள்ளது. மருதங்கேணி சம்பவத்தில், அச்சுறுத்தல் விடுத்த புலனாய்வாளர், பரீட்சை மண்டபத்தில் பாதுகாப்புக்கு நின்ற பொலிஸ்காரரின் துணையுடன் நிற்கிறார். அச்சுறுத்தப்பட்டவர்கள் பற்றி அரசும் அக்கறையின்றியுள்ளது.
குமார் பொன்னம்பலம் இந்த மண்ணில் சுட்டுக் கொல்லப்பட்டார். நீதி கிடைக்கவில்லை. ரவிராஜ், யோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டவர்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர். அமைச்சர்களாக உள்ளனர். இணைத்தலைவர்களாக உள்ளனர். சுட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை.
இந்த நாட்டில் நியாயம் பற்றி பேசுபவர்கள் துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தப்படுகிறார்கள். வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி அண்மையில் மிரட்டும் பாணியில் பேசியுள்ளார். டயஸ்போராவுடன் இணைந்து மீண்டும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஏற்படுத்த முனைவதாக கூறியுள்ளார். அவர் மீண்டும் துப்பாக்கிகளை எடுப்போம் என மிரட்டுகிறார். நாங்கள் செய்வதை செய்வோம், நீங்கள் பொத்திக் கொண்டிருங்கள் என்பதுதான் இதனர்த்தம்.
அலிசப்ரி போன்றவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். நீதி, இனநல்லிணக்கம் என்றால் என்னவென்பதை கற்பிக்க வேண்டும். இப்படியானவர்களுக்கு புனர்வாழ்வளித்தால்தான் துப்பாக்கியை எடுப்பது பற்றிய கதைகளை நிறுத்தலாம்.
அலி சப்ரி மீண்டும் ஒரு போரை விரும்புகிறாரா?
கஜேந்திரகுமாரை துப்பாக்கி முனையில் சுடலாமென இந்த அரசு நினைத்தால் அது மோசமான முன்னுதாரணம். அரச பயங்கரவாதத்தின் தெளிவான செய்தி.
தன்னை லிபரல்வாதியாக காட்டும் ஜனாதிபதி ரணில், மிகப்பெரிய பயங்கரவாதியாக, சர்வாதிகாரியாக இன்னொரு முகத்தை காட்ட முயன்றுள்ளார். இதன் இன்னொரு வடிவம்தான் கஜேந்திரகுமார் மீதான ஒடுக்குமுறை.
கஜேந்திரகுமார் வெளிநாட்டு பயணத்தடைக்குள்ளாகியுள்ளார். அவர் பயங்கரவாதியா? துப்பாக்கி வைத்திருந்தாரா? துப்பாக்கி வைத்திருந்தவன் ஓடிப்போய் நிற்கிறான். குற்றம்செய்தவனை தண்டிக்கவில்லை. இதுதான் இந்த நாட்டின் நீதியமைப்பு.
குற்றம்செய்தவனை நீதிபதியாக்குகிறீர்கள். யார் சுட்டானோ, வெட்டினானோ அவனை நீதிபதியாக்கி நீதி வழங்க முற்படுகிறீர்கள் என்றார்.




