மனைவியைத் தாக்கிய குற்றச்சாட்டில் பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொனகோவில் குடு அஞ்சு என அழைக்கப்படும் சின்ஹார அமல் ஷமின் டி சில்வாவை அழைத்துவர சர்வதேச பொலிஸாருடன் இலங்கை பொலிஸார் கலந்துரையாடியுள்ளனர்.
குடு அஞ்சு பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பொலிஸார் இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.
குடு அஞ்சு அரசியல் தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல வருடங்களாக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பிரான்சில் தங்கியிருந்த குடு அஞ்சு கடந்த வாரம் பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைதானார்.
குடு அஞ்சு தனது மனைவியை விட்டு பிரிந்து, பிரான்ஸ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்துள்ளார். இதனால், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
குடு அஞ்சுவை கைது செய்து வெளிநாட்டு கடவுச்சீட்டை சரிபார்த்த போது அவருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியிருப்பது பிரான்ஸ் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
ஆதாரங்களின்படி, குடு அஞ்சுவுக்கு எதிரான சிவப்பு நோட்டீஸ் குறித்து அவரது மனைவி பிரான்ஸ் பொலிசாருக்கு தகவல் அளித்தார்.
குடு அஞ்சு அரசியல் தஞ்சம் கோரியதாகவும், தனது சகோதரரின் கொலையை குறிப்பிட்டு, இலங்கைப் பொலிசார் அவரைக் கொல்லத் திட்டமிடுவதாகவும் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று வருடங்களுக்கும் மேலாக பிரான்சில் தங்கியிருந்த அஞ்சு, இங்குள்ள தனது கூட்டாளிகளை பயன்படுத்தி கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றை பெரிய அளவில் ஏற்பாடு செய்து வந்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு இரத்மலானையில் கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையான பொதுஜன பெரமுனவின் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் குடு அஞ்சு இருந்ததாக கூறப்படுகிறது.
அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இவருக்கும் அவரது கூட்டாளிகள் சிலருக்கும் சொந்தமான பல சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதவிர அவரது நெருங்கிய உறவினர்கள் சிலரது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை சமீபத்தில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மேற்கொண்டது.
கடந்த மார்ச் 30ஆம் திகதி, உண்டியல் முறை மூலம் அஞ்சுவின் போதைப்பொருள் பணத்தை அனுப்பிய நபரை சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு கைது செய்தது.
விசாரணையில் அஞ்சு கடந்த காலங்களில் போதைப்பொருள் கடத்தல் மூலம் 4000 மில்லியன் ரூபாய்க்கு மேல் வசூலித்தது தெரியவந்தது. அதிகாரிகளிடம் உள்ள அனைத்து தகவல்களையும் பயன்படுத்தி அவரை இந்த நாட்டுக்கு நாடு கடத்த பிரெஞ்சு அதிகாரிகளை சம்மதிக்க வைப்பார்கள் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.