25.7 C
Jaffna
January 2, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையை விட வேறெந்த நாட்டிலாவது ‘மிஸ்டர் 10%’ உள்ளாரா?: ஜனா எம்.பி கேள்வி!

சாத்வீக வழியில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாம் கோரிய போதெல்லாம் எம் மீது இனக்கலவரங்களாலும் யுத்தத்தினாலுமே அரசாங்கத்தினால் பதிலளிக்க முடிந்தது. யுத்தம் எமது நாட்டின் மக்களுக்கு பாரிய பொருளாதாரச் சுமையினை ஏற்படுத்தியிருந்தாலும் யுத்தத்தை முன்னின்று நடத்திய தரப்பினருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. யுத்தத்தின் பெயரால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் அதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கமிசன்கள் யாவும் இன்றைய கடன் சுமைப் பெருக்கத்துக்கு காரணங்களாகும் என சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா).

நாடாளுமன்றத்தில் இன்று (27) சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் வேளாண்மைச் செய்கை என்பது ஒரு மாதத்துக்கு முன்னரே தொடங்கப்படுவது, அந்த விதத்தில் நீங்கள் தற்போது யூரியா பசளையை 10ஆயிரத்துக்குக் கொடுப்பதை நாங்கள் வரவேற்கின்றோம்.

இருந்தாலும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று 8ஆயிரத்து 500 ரூபாவுக்கு யூரியா ஒரு அந்தர் வழங்குவதற்கு நீங்கள் முயற்சி செய்வதாக அறிகின்றோம். அதை முன்கூட்டியே செய்தால் எங்களுடைய விவசாயிகளும் பெற்று பயனடைவார்கள் என்பதுடன் டி.எஸ்.பி. பசளை 22கிலோ ஒரு ஏக்கருக்குத் தருவதாகக் கூறியிருக்கிறீர்கள். பெரும் போகத்துக்கு 10 கிலோக்கிராமும் சிறுபோகத்துக்கு 15 கிலோகிராமும் தான் கொடுக்கப்படுகிறது. ஏனைய பிரதேசங்களுக்கு பெரும்போகத்துக்கு 14 கிலோகிராமும் சிறுபோகத்துக்கு 22 கிலோகிராமும் கொடுக்கப்படுகிறது.

எங்களுடைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் அதற்கான ஏற்பாடுகளையும் செய்வீர்கள் என்று எதிர்பார்ப்பதுடன், இயற்கைப் பசளை ஒரு ஹெக்ரயருக்கு 20ஆயிரம் வழங்குவதாக கூறியிருக்கிறீர்கள். அதனையும் எங்களது மாவட்டத்துக்கும் விரைவாகக் வழங்குவீர்களென்றால் எமது விவசாயிகள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதிகளின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுவதையிட்டு எனது கவலையினைத் தெரிவித்து எனது உரையினை ஆரம்பிக்கின்றேன்.

இத்தகையதொரு விவாதம் இப் பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்படுவது தொடர்பாக இந்த நாட்டை நேசிக்கும் தமிழ் மகன் என்ற வகையில் எனது துயர்மிகு கவலையை இந்த உயரிய சபையில் பதிவு செய்கின்றேன். இந்த உயரிய சபையில் இந்த விவாதம் ஏன் நடைபெறுகிறது. இதற்கான காரணம் என்ன? இதற்கான காரண கர்த்தாக்கள் யார்? என்ற பல வினாக்கள் எனது மனதில் எழுகிறது. ஓன்று மட்டும் உண்மை.

இந்த நாட்டை நேசிக்கும் எந்த ஒரு தமிழனும் இதற்குக் காரணம் அல்ல. போலித் தேசியவாதம் பேசும் பெரும்பான்மையின சிங்கள அரசியல்வாதிகளே இந்த விவாதம் இந்த உயரிய சபையில் நடைபெறுவதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்;. ஏனெனில் சுதந்திரம் பெற்ற 75 வருட காலங்களாக இந் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்தவர்கள் அவர்களே. எனவே தான் இந்த விவாதம் இன்று இந்த உயரிய சபையில் நடைபெறுவதற்கு அவர்களே பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்று குறிப்பிட்டேன்.

இந்து சமுத்திரத்தின் முத்து எனப் புகழப்பட்ட எமது நாடு தென்னாசிய, தென்கிழக்காசிய நாடுகளுக்கு முன்னுதாரணமாக பொருளாதார ஸ்த்திரத்தன்மை, நாணய ஸ்த்திரத்தன்மை கொண்டிருந்த எமது நாடு, இன்று சர்வதேச ரீதியாக பொருளாதார வங்குரோத்து நிலைக்கு வந்துள்ளதென்றால், இதையிட்டு எம்மால் பெருமையடைய முடியுமா?

கடந்த சில மாதங்களாக எமது நாட்டின் முக்கிய பேசு பொருளாக இருந்தது சர்வதேச நாயண நிதியத்தின் ஊடாக பெறும் கடன்கள் தொடர்பானதாகும். 2ஆம் உலகப்போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தை சீரழித்த நிலைமையில் உலக நாடுகளின் நாணய ஸ்த்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிய நிலைமையில் உலக நாடுகளின் பொருளாதார ஸ்த்திரத்தன்மையைப் பேண வேண்டிய, நாயண ஸ்த்திரத்தன்மையை நிலைநிறுத்த வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டது. இதன் காரணமாக 1944ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் பிரிட்டன்வூட் மாநகரில் கூட்டப்பட்ட மகாநாடு உலகப் பொருளாதார ஒழுங்கில் முக்கிய மைல் கல்லாகும். உலகப் பொருளாதார வல்லுனர்கள் கூறுவார்கள் பிரிட்டன்வூட் மகாநாடு பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகள்தான் IBRD (International Bank for Recontraction and Development) எனப்படும் உலக வங்கி. அடுத்தது இன்று எமது பேசுபொருளான சர்வதேச நாணய நிதியம் என்பவையாகும்.

இதில் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய குறிக்கோள் ஒரு நாட்டின் உள்நாட்டு நாணயப் பெறுமதியினை உறுதியாக வைத்திருப்பதும் உலக வங்கியின் முக்கியமான நோக்கம் நாடுகளின் பொருளாதார ஸ்த்திரத்தன்மையைப் பேணுவதுமாகும். எனவே சர்வதேச நாணய நிதியத்தின் வகிபாகம் என்பது ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான எமது நாட்டின் நாணயத்தின் பெறுமதியை ஸ்த்திரப்படுத்துவதாகும். கடந்த காலங்களில் டொலருக்கெதிரான எமது நாணயத்தின் பெறுமதி அதள பாதாளத்துக்கு சரிந்து விழுந்திருந்தது.

கடந்த காலங்களில் எமது நாட்டில் முறையான இறைக்கொள்கையும் (Fiscal Policy) முறையான நிதி முகாமைத்துவம் (Financial Management) இருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நிதிக்கொள்கையினை, இறைக் கொள்கையினை கையாண்டவர்கள் இது தொடர்பான துறைசார் அனுபவம் கொண்டவர்களாகவோ நிபுணத்துவம் பெற்றவர்களாகவோ இருக்கவில்லை. ஆட்சியாளர்கள் எடுத்த தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு தலையாட்டி தாளம் போட்டுக் கொண்டிருந்த நிலைமையே இதற்கான காரணமாகும். பொருளாதார ரீதியாக தீர்மானம் எடுப்பதற்குப் பதிலாக அரசியல் லாபம் கருதி எடுத்த தீர்மானங்களும், வாக்குகளைப் பெறுவதற்காக எடுத்த தீர்மானங்களும், எமது நாட்டின் இந்த வங்குரோத்து நிலைமைக்கு அடிப்படைக் காரணமாகும்.

சர்வதேச ரீதியாக சர்வதேச நாடுகளிடம் பெற்ற கடன்களை மீளச் செலுத்தமுடியாத நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றபோது சர்வதேச சாணய நிதியம் முதலில் கூறிய கடன் பெற்ற நாடுகளிடம் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாடொன்றினை ஏற்படுத்துங்கள். இத்தகைய இணக்கப்பாட்டுக்கு இந்தியா, யப்பான் போன்ற நாடுகள் நேரடியாகவே எமது நாட்டின் கடந்த கால நட்புறவினையும் கடந்த கால இராஜதந்திரத் தொடர்புகளையும் கருத்தில் கொண்டு கடன் மறுசீரமைப்புக்காக இணக்கப்பட்டுக்கு இணங்கியது. நான் நினைக்கின்றேன். முதலாவதாக இந்த இணக்கப்பாட்டுக்கு வந்த நாடு இந்தியா என்பதாகவே இருக்குமென்று சீனாவோ இன்னமும் முறையான இணக்கப்பாடு தொடர்பாக இணங்கவில்லை என்பதாகவே நான் அறிகின்றேன். எனவே எமது வெளிநாட்டுக் கொள்கைகூட சிறப்பான முறையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்படவில்லை என்பதாகவே நான்கருதுகின்றேன்.

இவர்கள் எடுத்த ஜனரஞ்சகத் தீர்மானம் எமது நாட்டை ஏனைய நாடுகள் பரிகசிக்கும் அளவுக்கு இருந்துள்ளது. குறிப்பாக வங்காளதேசத்திடம் கடன் வாங்கி எமது கடனைத் தீர்க்கவேண்டிய அளவுக்கு எமது நாட்டின் நிலைமை மாறியுள்ளது எமது ஜனாதிபதி அவர்களின் வார்த்தையில் கூறுவதானால், சுதந்திரம் பெற்ற காலம் முதல் இரந்து பெற்று விருந்து உண்டு எல்லாவற்றையும் இழக்கவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை எமது நாட்டுக்கு ஏற்பட்டது.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்கள் ஒரு கருத்தினை முன்வைத்தார். இந்த நாட்டின் இன்றைய கையறு நிலைமைக்கு புரையோடிப்போன இனப்பிரச்சினை தீர்க்கப்படாமையும் நாட்டில் எங்கும் பரந்து வியாபித்து நிற்கும் ஊழலுமே இதன் அடிப்படைக் காரணம் என்று கூறினார். இரு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையாருக்கு காலம் கடந்து ஞானம் பிறந்துள்ளது. அவருக்குக் காலம் கடந்த ஞானம் எனினும் இது உண்மையிலேயே இனியாவது ஆட்சியாளர்களால் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு கருத்தாகும்.

எமது நாடு பாரிய கடன் சுமையை எதிர்நோக்கியுள்ளது. அதுவும் மீளச் செலுத்த முடியாத அளவுக்கு எமது கடன் சுமை உள்ளது. இதற்கான காரணம் என்ன? இனப்பிரச்சினையின் ஆணிவேரை உணராது, இனப்பிரச்சினையின் அத்திவாரத்தினை உணராது, அதனைப் பயங்கரவாதப் பிரச்சினையாகக் காண்பித்து சொந்த நாட்டு மக்கள் மீது யுத்தப் பிரகடனம் செய்ததன் விளைவும் இத்தகைய பாரிய கடன் சுமை எமது நாட்டின் மீது விழுவதற்குக் காரணம் என்பதை இன்னமும் எமது ஆட்சியாளர்கள் உணரவில்லை.

சாத்வீக வழியில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாம் கோரிய போதெல்லாம் எம் மீதும், எமது மக்கள் மீதும், எமது மண்ணின் மீதும் இனக்கலவரங்களாலும் யுத்தத்தினாலுமே அரசாங்கத்தினால் பதிலளிக்க முடிந்தது. இந்த யுத்தம் எமது நாட்டின் மக்களுக்கு பாரிய பொருளாதாரச் சுமையினை ஏற்படுத்தியிருந்தாலும் யுத்தத்தை முன்னின்று நடத்திய தரப்பினருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. யுத்தத்தின் பெயரால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் அதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கமிசன்கள் யாவும் இன்றைய கடன் சுமைப் பெருக்கத்துக்கு காரணங்களாகும்.

வெஸ்ற்மினிஸ்ரர் அரசியலமைப்பின் கீழ் சுயாதீனமாக இயங்கிய பகிரங்க சேவை ஆணைக்குழு, நீதிச் சேவைகள் ஆணைக்குழு என்பவற்றின் சுயாதீனத் தன்மை 1972ஆம் ஆண்டின் பின்னர் வந்த அரசாங்கங்களின் அரசியலமைப்புத் திருத்தங்;களின் மூலம் சுயாதீனத் தன்மையை இழந்தன. இது அரசியல் ரீதியான ஊழலுக்கு திறந்த வழியாகியது. இதன் உச்ச கட்ட நிலையே இன்றைய வங்குரோத்து நிலைக்கு முக்கிய காரணம்.

ஆட்சித் தலைவனின் மனைவி, மக்கள், குடும்பம் ஆட்சித்தலைவனின் சகோதரங்கள், அவர்களது குடும்பம், ஆட்சித் தலைவனின் பாடசாலை நண்பர்கள் வட்டம், ஆட்சித் தலைவனின் அடிவருடிகள், ஆட்சியாளர்களது, அமைச்சர்களது குடும்பம் என்று அனைவருமே செய்த ஊழல்களும் மோசடிகளுமே நாம் இன்று சர்வதேச நாணய நிதியத்தை நாடக் காரணமாகும்.

யுத்தம் என்ற பெயரில் ஆயுதக் கொள்வனவில் ஊழல், அபிவிருத்தி என்ற பெயரில் விகிதாசார முறையில் கொமிசன். உண்மையில் இந்த உயரிய சபையில் நான் வினவுகின்றேன். எந்தவொரு நாட்டிலாவது அந்த நாட்டின் அமைச்சர் ஒருவர் மிஸ்ரர் 10 பேர்சன்ற் என இலங்கையைத் தவிர எந்த நாட்டிலாவது அழைக்கப்பட்ட வரலாறு உள்ளதா? அமெரிக்க அதிபரோ, கனடா அதிபரோ, அவுஸ்திரேலிய அதிபரோ மேற்கொள்ளாத ஆடம்பர சர்வதேச பயணங்களை மேற்கொண்ட தலைவர்களை கொண்ட ஒரே நாடு நமது நாடாகும். இவற்றின் விளைவே சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய துர்ப்பாக்கிமாகும்.

தமிழில் ஒரு பழமொழியுள்ளது. பிச்சைக்குச் செல்லும் போது பிச்சைத் தட்டை முதுகுக்குப் பின்னால் மறைத்துக் கொண்டு செல்வதாக, இதே போல சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் செல்லும் போது நமது வரட்டுக் கௌரவத்தைப் பேசிக் கொண்டே இன்னும் இருக்கின்றோம். யுத்தத்தை முடிப்பதற்கு ஆயுதம் தாருங்கள், பயிற்சியினைத் தாருங்கள் என்றால் சர்வதேச சாடுகள் கொடுக்க வேண்டும். யுத்தத்திற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டு அதற்கான தீர்வினைச் செயற்படுத்துங்கள் என்றால், நீ யார் எமது உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட என்ற கோசம் போடுவீர்கள்.

இதே போலவே இன்று சர்வதேச நாணய நிதியத்திடம் எமது நாடு உறவினை மேற்கொள்கிறது. எமது நாட்டில் மேற்கொள்ளப்படும் ஊழல்களுக்கு எமது நாட்டின் பொருளாதாரத்துக்குச் சுமையாக இருக்கின்ற அரச நிறுவனங்களை தொடர்ந்து போசிப்பதற்கு, அத்தகைய நிறுவனங்களில் அரச ஆதரவாளர்களுக்கு உயர் வேதனத்துடன் நியமனம் வழங்குவதற்கு எதிர்கால அரசியலை நலனாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஜனரஞ்சகத் தீர்மானங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வசதிகளை அளிக்காது.

மாறாக எமது நாட்டு வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினைக் குறைப்பதற்கு எமது நாட்டின் வரி வருமானத்தினை அதிகரிப்பதற்கு அரசாங்கத்துக்கு சுமையாக இருக்கின்ற நிறுவனங்களின் மறுசீரமைப்பதற்கு மானியங்களையும் சமூக நலன்புரிச் செலவுகளையும் குறைப்பதற்கு ஆலோசனைகளை வழங்கும். வர்த்தக நடவடிக்கைகளில் அரசு நேரடியாக ஈடுபடுவதனைத் தவிர்க்க வேண்டும் போன்ற ஆலோசனைகளை சர்வதேச நாணய நிதியம் வழங்கும். வழங்கப்படுகின்ற நிதி முறையாக செலவிடப்படுகின்றதா என அவதானிக்கும். ஆனால், இன்று எமது பேரினவாத அரசியல்வாதிகள் நாட்டுப் பற்றுமின்றி, பொருளாதம் தொடர்பான சிற்றறிவும் இன்றி தமது இனவாதத்தின் மூலம் சர்வதேச நாணய நிதியத்தையும் மக்களையும் எதிரெதிராகக் காட்டி நிற்பதனை காணமுடிகிறது.

இன்றைய பொருளாதார இக்கட்டான நிலையிலும் கூட தொடர்ந்தும் வழமைபோல பிழையான தீர்மானங்களையே மேற்கொள்வீர்களானால் இன்று சர்வதேச நாணய நிதியம் தரும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் ஓரிரு மாதங்களுக்கே தாக்குப்பிடிக்கும். உங்களால் நிலையான அபிவிருத்தியும் ஏற்படாது வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை இடைவெளியும் குறைக்கப்படாது. சென்மதி நிலுவைப் பற்றாக்குறை தொடர்ச்சியாக அதிகரிக்கும். நாடு பொருளாதார ரீதியில் அதள பாதாளத்துக்குள் செல்லும். இதனை இந்த நாட்டை நேசிக்கும் தமிழ் மகன் என்ற வகையில் நான் கூறுகின்றேன்.

பேரினவாத ஆட்சியாளர்கள் நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்கமாட்டார்கள். நாட்டின் ஊழலற்ற நிருவாக முறையொன்றை ஏற்படுத்தமாட்டார்கள். இன்றும் கூட இத்தகைய பொருளாதார இக்கட்டான நிலைமையிலும் அமைச்சுக்களின் மூலம் செலவிடப்படும் செலவினங்கள் தொடர்பாக, ஊழல் இடம்பெறுவதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன என்றால் இதனை எதிர்க்கட்சிகளின் காழ்புணர்ச்சி தொடர்பான கூற்றாக கருதாது அதன் உண்மைத் தன்மையை உய்த்துணரும் உணரும் பக்கும் இன்னும் அரசுக்கு ஏற்படவில்லை என்பது எனது கணக்காகும்.

நாம் இன்றும் மீள முடியாத பொறிக்குள் சிக்கவில்லை. எமது நாடு வளமொன்னுமில்லத பாலைவனமல்ல. வளமொன்றுமில்லாத பாலைவன நாடுகளே தமது நாட்டை பசும் சோலைகளாக மாற்றிய வரலாறு உலகில் பல உண்டு. நமக்கு எமது நாட்டுக்கு நீர் வளம் உண்டு நில வளம் உண்டு மனித வளம் உண்டு உழைக்கும் திறன் கொண்ட உழைப்பாளர் படையுண்டு. புத்தி கூர்மையுடைய தீர்மானமெடுக்கும் கற்றறிந்த புத்தியுள்ள சக்திமிக்க புலமைசார் குழாமுண்டு. அரசின் பேரினவாதச் சிந்தனை மட்டும் மாறினால் இந்து சமுத்திரத்தின் முத்தாக நமது நாடு மீண்டும் மிளிரும்.

இந்து சமுத்திரத்தின் முத்தாக மீண்டும் மிளிர வைப்பதும் இந்து சமுத்திரத்தின் முத்தினை இந்து சமூத்திரத்தில் மூழ்க வைப்பதும் ஆட்சியாளர்களாகிய உங்கள் கரங்களிலேயே உண்டு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புலமைப்பரிசில் சர்ச்சை: அனைத்து மாணவர்களுக்கும் 3 கேள்விகளுக்கு முழுமையான புள்ளிகள்!

Pagetamil

குற்றத்தடுப்பு பிரிவினரால் நாமல் குமார கைது

east tamil

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் குறித்த விவாதம்

east tamil

அனுர அரசு இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும்

Pagetamil

ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள் இல்லை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

Leave a Comment