தமிழ் சங்கதி

இதுவரை போராடி எதைக் கண்டோம்?: இலங்கை தமிழ் அரசு கட்சி செயலாளரின் கேள்வியும், சில யதார்த்தங்களும்!

2009 இன் பின் ஜனநாயக வழியில் தமிழ் தரப்பினரால் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்க முடியவில்லையென தொடர்ந்து பலரும் சொல்லி வருகிறார்கள். இது ஏன் என புறக்காரணங்கள் பலதை பலரும் அலசி ஆராய்ந்தும் வருகிறார்கள்.

ஆயினும், தமிழ் தரப்பினால் ஜனநாயக வழியிலல்ல, ஆயுத வழியுட்பட – வேறெந்த வழியிலும் போராடி வெற்றி பெற முடியவில்லையென்பதே யதார்த்தம். இதுவரை வெற்றியடையவில்லையென்பதுடன், இனியும் வெற்றியடைய வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது. ஏதாவது ஆச்சரியங்கள் நடந்தால் மாத்திரமே தமிழ் தரப்பு வெற்றியீட்டும்.

2009 இல் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படும் போது கருணாநிதி என்ன செய்தார்? கருணாநிதி நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியுமென நரம்பு புடைக்க பேசுவதில் பலர், அந்த ஆண்டில் நல்லூர் திருவிழாவிலோ, வேறேதாவது கோயில் திருவிழாவிலோ உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்டவர்கள் தான்.

சுதந்திரத்தை கோருவதாக கூறும் தரப்பில், ஒரு சிறு பிரிவினர்தான் போராட தயாராக இருந்தார்கள் என்பது கசப்பான உண்மை. மற்றையவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்க்கை, கல்வி, தொழில் என்பவற்றுடன் “எஞ்சிய நேரத்தில்“ சுதந்திரம் தேவையாக இருந்தது.

இதை இப்பொழுது எதற்காக சொல்கிறோம் என்றால், நேற்று (9) வவுனியாவில் நடந்த தமிழ் கட்சிகள், பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல், தவிர்க்கவியலாமல் தமிழர்களின் இயல்பை மீளவும் நினைவூட்டியதால்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பாராம்பரிய வாழ்விடங்களை பாதுகாக்க, அடையாளங்களை பாதுகாக்க, தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க ஒரு பொதுக்கட்டமைப்பின் கீழ் செயற்படுவதென தமிழ் கட்சிகள் பலவும், பொது அமைப்புக்கள் பலவும் யாழ்ப்பாணத்தில் கூடி தீர்மானம் எடுத்திருந்தன.

மாவட்ட மட்டத்தில் கட்டமைப்புக்களை உருவாக்குவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வவுனியா மாவட்டத்தில் நேற்று கலந்துரையாடல் நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், போராட்டங்களால் பலனில்லையென்ற அப்பிராயத்தை முதலில் வெளிப்படுத்தினார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னரும், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இப்பொழுதும், அடிக்கடி போராட்டம் வெடிக்கும் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் சூழலில், கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் நேர்மாறான நிலைப்பாட்டையெடுத்தார்.

“இதுவரை போராட்டம் போராட்டம் என்று என்னத்தை கண்டோம்?“ என ஒரு கேள்வியும் எழுப்பினார்.

அரச உத்தியோகத்தரான அவர், போராட்டங்களால் தமது குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலைமையேற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதை தொடர்ந்து, வவுனியாவை சேர்ந்த பொதுஅமைப்புக்களின் சிலவற்றின் பிரதிநிதிகளும் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

போராட்டங்களை மேற்கொண்டால் தென்னிலங்கை போராட்டங்களை போல அரசாங்கம் கறாரான நடவடிக்கையெடுத்து விடலாம் என ஒருவர் அச்சம் வெளியிட்டார்.

போராட்டங்கள் நடத்த வேண்டாம் என்ற தரப்பினர், அரச ஆக்கிரமிப்புக்களை ஆவணப்படுத்தி, அவற்றை சர்வதேச சமூகத்திடம் கையளிக்க வேண்டுமென்றனர்.

தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், போராட்டங்கள் நடத்தினால் அரச அதிகாரிகளும் கோபமடைந்து, பின்னர் தகவல்களை பரிமாறாமலும் விட்டுவிடக்கூடும் என்றார்.

ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்த பொதுஅமைப்புக்கள் என கூறிக் கொள்பவர்கள் அச்சமடைவதை யாரும் குறைசொல்ல முடியாது. மக்கள் நலன்சார்ந்து இப்பொழுது பொதுஅமைப்புக்கள் உருவாகுவது அரிது. பிரபலமாகுவதற்கும், தொண்டு நிறுவனங்கள், தூதரங்களிலிருந்து பணம் பெறவும் பலர் பொதுஅமைப்புக்கள் என்ற பணம் சுரக்கும் வழியை கண்டடைந்துள்ளனர்.

ஆனால், இலங்கை தமிழ் அரசு கட்சி போன்ற- தமிழ் மக்களில் அதிகமானவர்களின் ஆதரவைப் பெற்ற- நீண்ட போராட்ட வரலாற்றை கொண்ட கட்சி தயங்குவது ஏற்புடையதல்ல. ப.சத்தியலிங்கத்தின் தயக்கம், அது தனிப்பட்ட சத்தியலிங்கத்தின் தயக்கம் என கொள்ள முடியாது. அவர் தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர்.

தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை அடைவதற்கு அகிம்சை வழியிலான போராட்ட வழிமுறை பலனற்றது என்ற அவநம்பிக்கையை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் வெளிப்படுத்தினாரா அல்லது அரச உத்தியோகத்தரான ப.சத்திலிங்கம் என்ற தனிமனிதர் வெளிப்படுத்தினாரா என்பதை அந்த கூட்டத்தில் யாரும் கேட்கவில்லை.

ஆனால், அதை தமிழ் அரசு கட்சி தெளிவுபடுத்த வேண்டும்.

இதேவேளை, போராட்டம் என புறப்பட்டு, இருக்கின்ற அரச உத்தியோகத்தையும் பறிகொடுத்து, சத்தியலிங்கம் தனது குடும்பத்தை நடுவீதிக்கு கொண்டு வர வேண்டுமென யாரும் எதிர்பார்க்க முடியாது. குடும்பமே அவரது முதல் தெரிவு. அது அவரது உரிமை.

அப்படியானால், இந்த யதார்த்தத்திற்குள் சிக்கிய மனிதர்களை கொண்ட கட்சியால், எது சாத்தியம், எது சாத்தியமில்லையென்பதையும் இலங்கை தமிழ் அரசு கட்சி வெளிப்படையாக பேச வேண்டும். போராட்டம் வெடிக்கும் என பொதுமக்கள் நிறைந்த கூட்டங்களிலும், போராடி எதைக் கண்டோம் என உள்ளக கலந்துரையாடல்களிலும் கூறும் இரட்டை அணுகுமுறையை தமிழ் அரசு கட்சி தவிர்க்க வேண்டும். அல்லது தமிழ் அரசு கட்சி கூறும் “போராட்டம் வெடிக்கும்“ என்பதற்கு உண்மையாக செயற்படக்கூடியவர்களிற்கு பொறுப்பளிக்க வேண்டும்.

இதுவும் தமிழ் மக்களின் வெற்றிக்கு முக்கியமான விடயம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அங்கஜன் வாங்கிக்கொடுத்த சிற்றுண்டிகளை பற்றைக்குள் வீசிய முன்னணியினர்!

Pagetamil

இது ‘தமிழ் தேசிய கள்ளக்காதல்’ கதை!

Pagetamil

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரை வழங்க விவசாயிகள் எதிர்ப்பு: கூட்டத்தை ஏற்பாடு செய்த சிறிதரன் எம்.பி ‘மிஸ்ஸிங்’!

Pagetamil

‘கரைத்துறைப்பற்று தராசு கூட்டாளிகள் சுயேச்சைக்குழுவென்றுதான் நானும் நினைத்தேன்’: எம்.ஏ.சுமந்திரன்!

Pagetamil

முல்லைத்தீவு முஸ்லிம் கூட்டணி தவறுதான்… கட்சியின் தலைவர் நானா- மாவைக்கு வந்த குழப்பம்: இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!