ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச் செய்கின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
வலிகாமம் வடக்கு வசாவிளான் மக்கள் தமது மீள் குடியேற்றத்தினை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் முதல் நாள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தொவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களின் உரிமைகளை ஏற்க மறுக்கின்றது. இப்போது ஆட்சியில் இருப்பவர்களும் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த ராஜபக்சாக்களையோ அல்லது மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஏனைய அரசாங்களையோ ஒத்ததாக தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தி வருகின்றது.
வசாவிளானில் அமையப் பெறும் இராணுவ வைத்திய சாலை பொதுமக்களின் காணிகளை இராணுவ அதிகாரங்களை பயன்படுத்தி அங்கு வாழ்ந்த பூர்வீக கிராம மக்களை வலோத்காரமாக வெளியேற்றி விட்டு அந்த மக்கள் வீடற்றவர்களாக முகாம்களில் வசிக்கும் போது ஆக்கிரமித்து கட்டப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் தற்பொது அமைக்கப்பட்டு வரும் சட்டங்கள், ஒழுங்குவிதிகளுக்க புறம்பான இந் இராணுவ வைத்தியசாலையை அகற்ற வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை நானே வழிமொழிந்தேன். அவ்விடயம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அறிக்கையிலும் எனது பெயரை கோடிட்டுக்காட்டி சகல திணைக்களங்களுக்கும் அனுப்பப் பட்டது.
ஆனால் போயா தினங்களில் கூட அங்கு வீரியமான முறையில் கட்டிடம் அமைக்கப்படுகின்றது. ஆகவே இங்கே நடப்பவற்றை பார்க்கும் போது சொல்லலவில் அரசாங்கம் பலவற்றை பேசினாலும் செயலளவில் ராஜபக்சாக்களை ஒத்ததாகவே இருக்கின்றது. நாட்டில் இலஞ்சத்தினையும் ஊழலையும் ஒழிக்கின்றார்கள் அதனை நாம் வரவேற்கின்றோம். ஒரு இனத்தின் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அரச அராஜகள், படுகொலைகள், இராணுவ மயமாக்கம் பற்றி நடவடிக்கை எடுக்கின்றீர்கள் இல்லை. காரணம் இந் நாட்டில் தமிழர்கள் என்றால் எதையும் செய்ய முடியும் என்ற சிங்கள பேரினவாத மனநிலை இன்றைய ஆட்சியாளர்களின் உள்ளங்களுக்குள்ளும் உள்ளதா எனக் கேள்வி எழுப்புகின்றோம்.




