வரும் செவ்வாய்க்கிழமை (21) தம்மை கைது செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் சனிக்கிழமையன்று தனது Truth சமூக தளத்தில் ஒரு பதிவில், கைது செய்யப்படுவதற்கு முன்னதாக எதிர்ப்பு தெரிவிக்க தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஆபாச நட்சத்திரத்திற்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கிலேயே அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“முன்னணி குடியரசுக் கட்சி வேட்பாளரும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படவுள்ளனர். எதிர்ப்பு தெரிவியுங்கள், நம் தேசத்தை திரும்பப் பெறுங்கள்!” மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து கசிந்ததை மேற்கோள் காட்டி, தன்னைப் பற்றி குறிப்பிட்டு ட்ரம்ப் எழுதினார்.
குற்றச்சாட்டுகள் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு செலுத்திய 130,000 டொலர் பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இந்த விசாரணை நடக்கிறது.
ஸ்டெபானி கிளிஃபோர்ட் என்ற இயற்பெயர் கொண்ட டேனியல்ஸ், பல ஆண்டுகளுக்கு முன்பு ட்ரம்புடன் தனக்கு இருந்ததாகக் கூறும் ஒரு விவகாரத்தைப் பற்றி பகிரங்கமாகப் பேசாமல் இருப்பதற்காக தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். இந்த விவகாரம் நடந்ததாக ட்ரம்ப் மறுத்துள்ளார்.
தேர்தல் பிரச்சார நேரத்தில் ஆபாச அழகி வாய் திறந்தால், பின்னடைவு ஏற்படுமென கருதி, அவர் பேசாமலிருப்பதற்காக இந்த பணம் வழங்கப்பட்டது.