யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் தனித்து வசிக்கும் முதியவர்களிடம் சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி, நூதன மோசடி நடந்துள்ளது.
சுன்னாகத்திலுள்ள வயோதிபத் தம்பதியின் வீட்டிற்கு கடந்த வாரம் நபரொருவர் சென்றுள்ளார். அரச உத்தியோகத்தர் போல தோன்றும் விதமாக ஆடையணிந்திருந்தவர், முகக்கவசமும் அணிந்திருந்தார்.
அந்த பிரதேசத்தின் சமுர்த்தி உத்தியோகத்தராக புதிதாக நியமனம் பெற்றவர் தானென குறிப்பிட்டு, அந்த முதியவர்களிற்கு சமுர்த்தி கொடுப்பனவு கிடைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி பயனாளியாக இணைக்க வேண்டுமென குறிப்பிட்டு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்துள்ளார்.
பின்னர், சமுர்த்தி பயனாளியாகுவதற்கு 30,000 ரூபா செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அவ்வளவு பணம் தம்மிடமில்லையென அவர்கள் தெரிவித்த போது, பணத்தொகையை படிப்படியாக குறைத்து, இறுதியில் 5,000 ரூபா செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த குடும்பத்தினர் 5,000 ரூபா செலுத்தியுள்ளனர்.
குடும்பத்தினரின் கையெழுத்தை பெற்றுக்கொண்டு புறப்பட்டு சென்ற நபர், சற்று நேரத்தில் மீண்டும் திரும்பி வந்துள்ளார். 5,000 ரூபா பணம் போதாது என்றும், மேலும் 5,000 ரூபா செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த தம்பதியினர், இது பற்றி மகனிடம் பேசுங்கள் என குறிப்பிட்டு, வீட்டுக்குள் மகன் இருப்பதை போல பாவனை செய்து, அவரை அழைத்துள்ளார். (அவர்களது மகன் வீட்டிலிருக்கவில்லை)
குடும்பத்தினர் சந்தேகமடைந்து விட்டார்கள் என்பதை உணர்ந்த அந்த நபர் வெளியே ஓடிச் சென்று, மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.