25.9 C
Jaffna
March 29, 2024
தமிழ் சங்கதி

யாழ் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்ட் இனி போட்டியிட மாட்டார்: முதல்வர் வேட்பாளராக அறிவிக்காததால் வித்தியாதரன் அதிருப்தி!

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர், யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவின் போது, இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் இ.ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிட மாட்டார் என இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (28) யாழ் மாநகரசபையின் உறுப்பினர்கள், வேட்பாளர்களுடனான சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இதன்போது, ஆர்னோல்ட் எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார்.

யாழ் மாநகரசபையின் முதல்வர் இ.ஆர்னோல்ட்டின் நியமன சர்ச்சை தொடர்பில், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் வ.பார்த்தீபன் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விவகாரங்கள் தொடர்பில் ஆராய்வதென்ற பெயரில், யாழ் நகரிலுள்ள சொகுசு ஹொட்டலொன்றில் உறுப்பினர்களும், வேட்பாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சிரேஸ்ட உப தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கருத்து தெரிவித்த சுமந்திரன், நீதிமன்ற வழக்கு தொடர்புடைய ஆவணமொன்றில் அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

“ஆர்னோல்ட் அடுத்த மாநகரசபையில் முதல்வர் பதவிக்கு போட்டியிட மாட்டார் என்பதை உறுதி செய்துள்ளார். அதனால், இம்முறை அவரை முதல்வர் பதவியில் பாதுகாக்க வேண்டும்“ என்ற சாரப்பட எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாமல் தமிழ்பக்கத்துடன் பேசிய, இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என ஆர்னோல்ட்டிற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி, முன்னாள் பத்திரிகையாளரான வித்தியாதரனிற்கு முதல்வர் பதவிவழங்குவதே எம்.ஏ.சுமந்திரன் தரப்பினரின் நோக்கம் என்றார்.

என்றாலும், இந்த விவகாரங்கள் எதுவும் மாவை சேனாதிராசாவுடன் கலந்துரையாடப்படவில்லை, அவருக்கு தெரியாது என்றும் அந்த பிரமுகர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ் மாநகர முதல்வர் வேட்பாளரான தன்னை அறிவிக்க வேண்டுமென வித்தியாதரன் விரும்புகிறார். இது தொடர்பில் கட்சிக்குள் அழுத்தம் பிரயோகித்து வருகிறார்.

அண்மையில், எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் மற்றும் கட்சி பிரமுகர்கள் சிலரிடம் தொலைபேசி வழியாக வித்தியாதரன் இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். என்றாலும், இப்பொழுது வித்தியாரனை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், மாவை சேனாதிராசா அதை மறுத்து அறிவித்தல் விடுத்து விடலாம் என்பதால், பகிரங்க அறிவிப்பை தவிர்க்கலாம் என சுமந்திரன் தரப்பினர் வித்தியாதரனை ஆசுவாசப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஆர்னோல்ட் அடுத்த மாநகரசபையில் முதல்வர் பதவிக்கு போட்டியிட மாட்டார் என்பதை, மாவை சேனாதிராசாவின் முன்னிலையில் அனைவருக்கும் அறிவித்து விடலாமென, அந்த தரப்பினர் வித்தியாதரனை சமரசம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஆர்னோல்ட் போட்டியிடாவிட்டால், வித்தியாதரனிற்கான முக்கிய போட்டியாளர்கள் யாருமில்லையென்பதை உறுதிப்படுத்தி, வித்தியாதரனை சமரசப்படுத்தவே, நேற்றைய சந்திப்பில், ஆர்னோல்ட் போட்டியிட மாட்டார் என்று கூறப்பட்டதாக அறிய வருகிறது.

என்றாலும், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காதது வித்தியாதரனை அதிருப்தியடைய வைத்துள்ளது. நேற்றைய கூட்டம் முடிந்ததும் முதல் ஆளாக வித்தியாதரன்தான் வெளியேறினார்.

நேற்றே அவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு புறப்பட்டு விட்டார். தேர்தல் நடக்கலாம், நடக்காமல் விடலாம் என்ற நிச்சயமற்ற நிலையில், அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலைமையில், கட்சிக்குள் அழுத்தத்தை பிரயோகிக்க வித்தியாதரன் கொழும்பு புறப்பட்டு சென்றிருக்கலாமென கருதப்படுகிறது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் சிறிதரனை மௌனமாக்கியது எது?

Pagetamil

வெடுக்குநாறிமலை அட்டூழியம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட முஸ்தீபு!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்பட்டதால் கடல் கடக்க அனுமதிக்க முடியாது: வி.மணிவண்ணனின் கோரிக்கையை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு!

Pagetamil

‘திருகோணமலை குழப்பத்துக்கு முடிவில்லாமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாம்’: தமிழ் அரசு கட்சியின் தலைமைக்கு இரா.சம்பந்தன் மீண்டும் அறிவித்தல்!

Pagetamil

‘எனது ஆதரவாளர்கள் புறமொதுக்கப்படுகிறார்கள்’: சுமந்திரனை தடுப்பது உத்தியா?; சம்பந்தனின் புகாரின் பின்னணி!

Pagetamil

Leave a Comment