அரசாங்கத்திடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைத்து அடுத்த தேர்தலில் அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் பாரம்பரிய அரசியல் முறையிலிருந்து விலகி நாட்டுக்கான தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
பணவீக்கம் அதிகரித்துள்ளமையால் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைமையை நாம் மறந்து விடவில்லை என்றும், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை கட்டம் கட்டமாக தீர்த்து அடுத்த வருடம் மக்களுக்கு மேலும் நிவாரணங்கள் வழங்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நுவரெலியா நகர மண்டபத்தில் இன்று (22) முற்பகல் நடைபெற்ற உணவு பாதுகாப்பு தொடர்பான மாவட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
மேலும் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் ஜனாதிபதி இங்கு கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தான் அரசியலில் ஈடுபடவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, வாழ்க்கைச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.
மக்கள் இன்று ஒரு குழுவை அன்றி முழு அரசியல் முறைமையையும் நிராகரித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை கட்டியெழுப்புவதன் மூலமே மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் தெரிவித்த்தாவது-
நுவரெலியா மிகவும் முக்கியமான மாவட்டம். நுவரெலியா என்பது இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மாவட்டம் ஆகும். அத்துடன் விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் மாவட்டமாகவும் இது உள்ளது.
கடந்த மே மாதம் உரத் தட்டுப்பாட்டைச் சந்தித்தீர்கள். அச்சூழலை நாம் இப்போது கடந்துவிட்டோம். விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்கும் அதேவேளை அடுத்த ஆண்டு பற்றியும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இந்த ஆண்டு, பொருளாதார வீழ்ச்சிக் காரணமாக உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருக்கின்றோம். ஆனால் உக்ரைன் போர் காரணமாக அடுத்த ஆண்டு உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம். அச்சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.
நாம் ஆரம்பித்துள்ள இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு முழுவதும் செயல்படுத்த எதிர்பார்க்கின்றோம். ஏனெனில், இந்த உலகளாவிய நிலைமை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அந்த நிலையில் அபிவிருத்தியடைந்த நாடுகளால் மட்டுமே அவற்றை வாங்க முடியும். அந்தப் பின்னணியில் இந்தச் செயற்பாடுகளை நாம் வெற்றியடையச் செய்ய வேண்டும். இன்று இத்திட்டம் கிராம அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்திற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் எங்களுக்கு அறிவிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். விவசாய அமைச்சின் ஊடாக இதற்கு அவசியமான அனைத்து வசதிகளையும் வழங்குவோம்.
உலக உணவுத் திட்டத்தில் இருந்து கிடைக்கவிருக்கும் நிவாரணம் குறித்த அறிக்கை அண்மையில் கிடைத்தது. ஏனைய நாடுகளிடமிருந்து எங்களுக்கு உதவி கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
மேலும், கடன் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடல்கள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதன் மூலம் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். இருந்தாலும் இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை நிறுத்த முடியாது.
அனைவரையும் ஒன்றிணைத்து நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இத்திட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் உங்களது வெற்றியிலேயே தங்கியுள்ளது. நீங்கள் வெற்றி பெற்றால் நாடும் வெற்றி பெறும்.
இந்தப் பெருந்தோட்டத்தின் சில பகுதிகளில் போஷாக்கின்மையைத் தடுப்பதற்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு அடுத்த வருடம் பணத்தை ஒதுக்க எதிர்பார்க்கின்றோம். இந்தச் செயற்பாடுகள் அனைத்திற்கும் பிரதேச மட்டத்தில் ஒரு கூட்டுப் பொறிமுறையை நிறுவியுள்ளோம். அதற்காக அரச சார்பற்ற துறைகளை ஈடுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அனைவரும் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் .
வரலாற்றில் என்றும் இல்லாததொரு சவாலுக்கே நாம் இன்று முகங்கொடுத்துள்ளோம். இந்நாட்டிலுள்ள மக்களின் பெரும் பகுதியினர் இன்று பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். பணவீக்க அதிகரிப்புடன் பொருட்களின் விலையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் இன்று அனைவருக்கும் இக்கட்டானதொரு நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்களை நாம் மறந்து விடவில்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அதேநேரம் 2023 ஆம் ஆண்டில் மக்களுக்கு இதனை விடவும் நிவாரணங்களை வழங்க எதிர்பார்க்கின்றோம். நாம் முன்னேறிச் செல்ல வேண்டுமாயின் இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தை தாண்டிச் செல்ல வேண்டும்.
இதுபோன்ற உணவு பாதுகாப்பு வேலைதிட்டத்தில், நாம் அரசியல் நோக்கத்தை விடுத்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்தப் பொருளாதார வீழ்ச்சியானது இதற்கு முன்னர் இடம்பெறாததொன்று. எனவே இப்பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசியல் நோக்கை விடுத்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எம்மிடம் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் இந்த இடத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இது தொடர்பில் நாம் தார்மீக ரீதியாகச் சிந்திக்க வேண்டும். எமக்கு வேறு வழியில்லை.
நான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் செய்யவில்லை.
துன்பத்திலுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு முயற்சி செய்யும் வகையிலேயே நான் அனைவருடனும் கதைத்தும், அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தியும் வருகின்றேன்.
தோட்டங்கள், கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களில் உள்ள மக்களுக்கும் நாம் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அரசியல் ரீதியாக எவ்வித வேறுபாடுகள் இருந்தாலும் இங்கே நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்றுவோம்.
எனினும் சிலர் இன்னும் பாரம்பரிய முறைப்படியே நினைத்துப் பார்க்கின்றனர். எல்லாப் பொறுப்புக்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்தால் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அவர்கள் நினைப்பார்கள். அது வெற்றியடையாது. இன்று மக்கள் அரசாங்கத்தை மட்டும் குறை கூறவில்லை. ஒட்டுமொத்த பாராளுமன்றத்தையும் மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். இன்று மக்களுக்கு இந்த அரசியல் முறைமையே வெறுத்துள்ளது. 75 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு நாம் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும்.
இளைஞர்கள் இன்று அரசியலில் இருந்து விலகியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதாயின் நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும். நாம் நடைமுறையிலுள்ள அரசியல் முறைமை முழுவதையும் மாற்றுவதன் மூலம் முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கு முன்னர் நாம் மக்களின் பசியைத் தீர்க்க வேண்டும்.
இன்று மக்கள் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக சிரமப்படுகின்றனர். இந்நிலைமையை இல்லாமல் செய்வதாயின் எமது தவறுகளை திருத்திக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்த நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும்.