கனடாவிற்கு கடல் மார்க்கமாக பயணித்து. தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாமென தெரிவித்து, இரண்டு இலங்கையர்கள் இரசாயன திரவத்தை அருந்தியிருந்தனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மியான்மரிலிருந்து கடற்த ஓக்டோபர் 8ஆம் திகதி சிறிய கப்பலொன்றில் கனடாவிற்கு பயணித்த 303 இலங்கையர்கள், தென்சீன கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சமயத்தில் யப்பானிய கப்பலால் காப்பாற்றப்பட்டு, வியட்நாமிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களை இலங்கைக்கு திரும்ப அழைத்து வரும் முயற்சியில் புலம்பெயர்ந்தவர்களிற்கான ஐ.நா முகவரமைப்பு முயற்சித்து வரும் நிலையில், தம்மை இலங்கைக்கு அனுப்ப வேண்டாமென தெரிவித்து, இரண்டு அகதிகள் தற்கொலை முயற்சி மேற்கொண்டனர்.
அவர்களில் ஒருவரே உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 32 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
4வது பிள்ளையான பெண் குழந்தை 6 மாதங்களின் முன்னரே பிறந்துள்ளது.
அவரது மரணத்தை கொழும்பிலுள்ள வியட்நாம் தூதரகம் உறுதி செய்து, குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளது.