நோர்ட் ஸ்ட்ரீம் 1 எரிவாயு குழாய் காலவரையின்றி மூடப்படும் என்று ரஷ்யா கடந்த வார இறுதியில் அறிவித்த பிறகு, திங்களன்று ஐரோப்பிய நாணயமான யூரோவின் மதிப்பு 20 ஆண்டுகளில் காணாத அளவில் சரிந்துள்ளது.
யூரோ 20 ஆண்டுகளில் முதல் முறையாக 99 சென்ட்டுகளுக்கு கீழே சரிந்துள்ளது.
யூரோவின் பெறுமதி 0.7 சதவீதம் குறைந்து 98.80 அமெரிக்க சென்ட்களாக இருந்தது. இதற்கிடையில், Euro Stoxx 50 எதிர்காலம் 3.3 சதவீதம் குறைந்தது.
ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
“ரஷ்யா காலவரையறையின்றி ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது, மீள ஆரம்பிக்கவில்லை என்பதன் முழுப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, யூரோ இன்னும் எதிர்மறையாக உள்ளது. எரிவாயு இல்லை” என்று ஒரு வங்கி நிபுணர் நிலைமை குறித்து குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் எரிசக்தித் தட்டுப்பாடு, அதிகரிக்கும் விலைகள், வளர்ச்சிக்குப் பாதிப்பு ஆகியவை ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
வார இறுதியில், ஐரோப்பிய நாடுகள் சரிவைக் கட்டுப்படுத்தவும், வளர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்கவும் தொடர் நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
ஜேர்மனியின் ஆளும் கூட்டணி 65 பில்லியன் டொலர் பணவீக்க நிவாரணப் பொதிக்கு ஒப்புக்கொண்டது. ஜேர்மன் அரசாங்கத்தால் வழங்கப்படும் மூன்றாவது நிவாரணப் பொதி இதுவாகும். மொத்தம் 95 பில்லியன் டொலர்கள் பெறுமதியான நிவாரணப்பொதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட நிவாரணப் பொதியில் ஆற்றல் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் குடிமக்களுக்கான மலிவான பொதுப் போக்குவரத்து ஆகியவை அடங்கும்.
ரஷ்ய அரசுக்குச் சொந்தமான எரிவாயு நிறுவனமான Gazprom, ஓகஸ்ட் 31 அன்று தொடங்கிய மூன்று நாள் பராமரிப்புக் காலத்திற்குப் பிறகு, குழாய் சனிக்கிழமை திறக்கப்படாது என்று கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
Gazprom வெளியிட்ட அறிக்கையில், திட்டமிட்ட மூன்று நாள் பராமரிப்பு நடவடிக்கையின் போது ஒரு விசையாழியில் “எண்ணெய் கசிவை” கண்டுபிடித்ததாகவும், “அது சரிசெய்யப்படும் வரை Nord Stream வழியாக எரிவாயு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும்” என்றும் சுட்டிக்காட்டியது.
பால்டிக் கடலுக்கு அடியில் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி வரை செல்லும் குழாய் ஐரோப்பிய நாடுகளின் உயிர்நாடியாகும். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிலிருந்து ரஷ்யாவிற்கு எதிராக இருந்த போதிலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது அதிக அழுத்தத்தை பிரயோகிக்காமைக்கு இதுதான் காரணமாகும்.
எரிவாயு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பிறகு, 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள், எதிர்காலத்தில் ரஷ்யா விநியோகங்களை மீண்டும் தொடங்காது என்று அஞ்சுகின்றன. மேலும் இது யூரோவை மேலும் பின்னுக்குத் தள்ளக்கூடும்.