இலங்கை திருச்சபையின் வட மாகாண திருச்சபைகளின் குருமுதல்வர் மாநாடு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. 97 வருடங்களாக இலங்கை திருச்சபை வடக்கு மாகாணாத்தில் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலயைில், திருச்சபையின் பணிகள், அடுத்த கட்ட செயற்பாடுகள் உள்ளிட்ட கடந்தகால பணிகள் தொடர்பிலும், அடுத்துவரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் தொடர்பிலும் இன்றைய மாநாட்டில் ஆராயப்பட்டது.
வடமாகாண குரு முதல்வரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அருட்பணி எஸ் டி பரிமலச்செல்வன் தலைமையில் குறித்த மாநாடு கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இலங்கைத் திருச்சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த மாநாட்டில் வடக்கு மாகாணத்தில் உள்ள இலங்கை திருச்சபையின் அளுகையின் கீழ் உள்ள திருச்சபை குருவானவர்கள், திருச்சபைகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை திருச்சபைக்கு கொழும்பு மற்றும், குருணாகல் ஆகிய ஆதீனங்கள் உள்ள நிலையில் மற்றுமொரு ஆதீனத்தை உருவாக்கி, மூன்று பேராயர்களைக்கொண்ட இலங்கை திருச்சபையாக உருவாவது தொடர்பில் இன்றைய மாநாட்டில் மும்மொழிவு முன்வைக்கப்பட்டது.
இலங்கை திருச்சபையானது வடக்கு மாகாணத்தில் 97 ஆண்டுகளாக சமய மற்றும் கல்வி, பொதுப்பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது.இந்த நிலயைில் நீண்ட கால பயணத்தில் புதிய ஆதீனம் ஒன்றை உருவாக்குவதன் ஊடாக மேற்குறித்த பணிகளை விஸ்தரிக்கும் வகையில் குறித்த மும்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, கத்தோலிக்க திருச்சபைகளின் யாழ் மற்றும் மன்னார் ஆயர் இல்லம், தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனம் என உள்ள நிலையில், இலங்கை திருச்சபையின் புதிய ஆதீனமனது வடக்கு மாகாணத்தை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் திருச்சபை மக்களிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.