சீனக் கப்பலான யுவாங் வாங் 5 சர்ச்சை தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று (8) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில்,
சீனக் கப்பலுக்கு 2022 ஓகஸ்ட் 11-17 திகதிகளில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பல் நோக்கங்களிற்கான அனுமதி அமைச்சினால் 12 ஜூலை 2022 அன்று கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேலதிக ஆலோசனைகள் தேவைப்படுவதால், குறித்த கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்வதை ஒத்திவைக்குமாறு அமைச்சு கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவையும் சிறந்த உறவுகளையும் உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு விரும்புகிறது, அண்மையில் கம்போடியாவின் போன்ம் பென் நகரில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது இரண்டு வெளிவிவகார அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் வாங் யீ ஆகியோரால் வலியுறுத்தப்பட்டது.
இரு வெளியுறவு அமைச்சர்களுக்குமிடையிலான இந்த முதல் சந்திப்பில், நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் நிலையான கோட்பாடாக இருக்கும் ஒரே சீனா கொள்கைக்கான இலங்கையின் உறுதியான உறுதிப்பாட்டை அமைச்சர் சப்ரி குறிப்பிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.