ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா பொதுஜன பெரமுன கூட்டு அரசின் அமைச்சரவை நேற்று பதவியேற்றது. சில மாதங்களின் முன்னர் வரை நீடித்த அதே-தோல்வியடைந்த அமைச்சர்களே மீண்டும் பதவியேற்றுள்ளனர்.
புதிய மொந்தையில் பழைய கள்ளு பாணியில் அமைச்சரவை அமைந்துள்ளது.
இந்த அமைச்சரவை நியமனத்திற்கு முன்னர் வரை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் யாரையாவது அமைச்சராக்க, ரணில் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
அமைச்சு பதவியை ஏற்று சர்வகட்சி அரசாங்கத்தில் இணைக்க வலைவீசப்பட்டு வருகிறது.
கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களை ரணில் தரப்பு தொலைபேசியில் தொடர்பு கொண்ட, வண்ணமிருக்கிறது.எனினும் கூட்டமைப்பின் பிரமுகர்கள் யாரும் அரச தரப்பினரின் அழைப்பை ஏற்கவில்லை.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பல்டியடித்த கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பியொருவர், கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, கூட்டமைப்பின் சில எம்.பிக்கள் எம்முடன் இணைந்து விட்டார்கள். நீங்களும் அரச பக்கம் வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.
“நாங்கள் சோறு சாப்பிடுகிறோம். அதனால் இருக்க வேண்டியதெல்லாம் இருக்கிறது“ என கலையரசன் எகிற, வலைவீச வந்தவர் வாலைச்சுருட்டிக் கொண்டு சென்று விட்டார்.