சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிடுமாறு கோரி கொழும்பு பேராயர் மல்கோம் கர்தினால் ரஞ்சித் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இத்தாக்குதல்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை சிபாரிசுகளுடன் 2021 ஜனவரி 31 ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், பொலிஸ் மா அதிபரின் கீழ் இலங்கை பொலிஸில் பணியாற்றும் அதிகாரிகள் உட்பட பல அரச அதிகாரிகளின் கடுமையான அலட்சியம் மற்றும் குறைபாடுகள் பல கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார மற்றும் சிஐ சமிந்த நவரத்ன ஆகியோரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தனக்குத் தெரிந்த வரையிலும் பொதுவெளியில் உள்ள தகவல்களின் அடிப்படையிலும் தெரிவித்தார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார மற்றும் சிஐ சமிந்த நவரத்ன ஆகியோரின் கடவுச்சீட்டை முடக்குவதற்கு உத்தரவிடுமாறும் அல்லது அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்குமாறும் கொழும்பு பேராயர் மேலும் கோரியுள்ளார்.
சட்டத்தரணி திருமதி இஷாரா குணவர்தன ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.