புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை நியமிப்பதன் மூலம் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான கலந்துரையாடல்கள் தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் இன்று நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 27வது சர்வதேச மாநாட்டின் போது காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாற்றிய ஜனாதிபதி, அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படுவதாகக் கூறினார்.
இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளியான ஜப்பானிடம் இருந்து நிதியுதவி பெறுவது தொடர்பான கலந்துரையாடல்கள் விரைவில் முடிவடையும் என அரச தலைவர் தெரிவித்தார்.
பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஜப்பான் தனது ஆதரவை வழங்கும் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு சாத்தியமான உதவிகளை ஆராயுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து நட்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.