இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகாவிட்டால், மகாசங்க பேரவையின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளும் நிராகரிக்கப்படுவார்கள் என மகா சங்கம் இன்று அறிவித்துள்ளது.
சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை நடைபெற்ற மகாசங்க மாநாட்டின் போது உரையாற்றிய ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர் ஒலகன்வத்தை சந்திரசிறி தேரர், தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றும், மக்களின் வாழ்வில் ஸ்திரத்தன்மை திரும்ப ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தேரர் கூறினார்.
அரசியலமைப்பில் உடனடித் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்தை பலப்படுத்துமாறும் தேரர் கோரியுள்ளார்.
பிரதம பீடாதிபதிகளின் கடிதத்திற்கு செவிசாய்த்து சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நிறுவுமாறு ஜனாதிபதிக்கு தேரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரிய தேரர், பிரதமர் பதவி விலகத் தவறினால், அனைத்து அரசியல்வாதிகளையும் நிராகரிப்பதாக மகாசங்கத்தினர் உறுதிமொழி எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் அகலக்கட சிறிசுமண தேரர் கருத்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு அதிகப்படியான அதிகாரம் வழங்கப்பட்ட போது மக்களின் எதிர்பார்ப்புகள் தகர்ந்து போனதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது; லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கள் கலைக்கப்பட்டன. அதே நேரத்தில் லஞ்சம், ஊழல் மற்றும் பொது நிதியை தவறாக பயன்படுத்தினாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தணிக்கைக்கு விலக்கு அளிக்கப்பட்டனர், . ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு அரச நிறுவனங்களின் தலைமைத்துவம் வழங்கப்பட்ட அதேவேளை, தேவையான தகுதிகள் இல்லாத நபர்களுக்கு அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆதரவாக இருப்பவர்கள் கணிசமான சொத்துக்களை குவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
உள்ளூர் பயிர்ச்செய்கைக்குப் பதிலாக மஞ்சளை இறக்குமதி செய்யும் நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்றுநோய் பரவியுள்ள நிலையில், முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க போன்ற நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை எனவும், நாட்டை மேலும் நெருக்கடிக்கு வழிநடத்தியதாகவும் அகலக்கட சிறிசுமண தேரர் தெரிவித்தார்.
நாடு மேலும் கடனில் தள்ளப்பட்ட நிலையில் சரியான கட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசிகள் பெறப்பட்டதாக அவர் கூறினார்.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில்; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்து நடை பாதைகளுக்காக பணத்தை செலவிடுகிறார். உடற்பயிற்சி செய்து மட்டும் உயிர் வாழ முடியாது என தேரர் தெரிவித்துள்ளார்.
எரிவாயு, எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளின் தட்டுப்பாட்டைக் கண்டித்த தேரர், தற்போதைய நிர்வாகம் நீண்ட வரிசையில் நிற்பதையே உறுதிசெய்துள்ளது என்றார்.




