கொழும்பு, பன்னிப்பிட்டிய – தெபானம பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்புப் பொருட்கள் கொள்வனவு செய்யும் விற்பனை நிலையமொன்றில் இன்று (21) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரெல்ல வீதியில், பொல்வத்த சந்திக்கு அருகில் அமைந்துள்ள குறித்த விற்பனை நிலையத்தில் இன்று காலை சுமார் 9.05 மணியளவில் தீ பரவ ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே மாநகர சபைக்குச் சொந்தமான மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கொழும்பு தீயணைப்புப் பிரிவின் தீயணைப்பு வாகனம் ஒன்றும் இணைக்கப்பட்டு, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தத் தீ விபத்தினால் குறித்த விற்பனை நிலையத்திற்கும் அங்கிருந்த பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், இச்சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




