கிளிநொச்சி, அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், மேசையின் மீது கால்களை தூக்கி வைத்திருந்த புகைப்படம் கடந்த சில நாட்களின் முன்பாக வெளியாகியிருந்தது. வைத்தியரின் எதிரே நோயாளியொருவர் உட்கார்ந்திருந்தார். வைத்தியரின் கையில் கைத்தொலைபேசியிருந்தது.
இந்த புகைப்படம் வெளியாகிய முதல் சில மணித்தியாலங்களில், வைத்தியர் மீதான வசைகளால் சமூக ஊடகங்கள் நிறைந்திருந்தன.
பின்னர் யாரோ ஒருவர் வைத்தியருக்கு ஆதரவாக எழுதியதைப் பகிர்ந்து, வைத்தியர் ஒரு கடமை வீரன் என நெட்டிசன்கள் பகிர்ந்தனர். வைத்தியரை விமர்சித்தவர்களைத் தாறுமாறாக திட்டி, பின்தங்கிய பிரதேசத்தில், நோயுற்ற காலுடன் பணியாற்றும் கடமைவீரனை விமர்சிப்பவர்களிற்கு மனச்சாட்சியென்பது கிடையாதா என அவர்கள் கேள்வியெழுப்பினர்.
சமூக ஊடக நியதிப்படி, இரண்டு நாளில் அந்த விடயத்தை கைவிட்டுவிட்டு, அடுத்தடுத்த பரபரப்புக்களிற்கு நெட்டிசன்கள் தாவிச் சென்று விட்டனர்.
அந்த வைத்தியரின் கால்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதாகவும், வைத்திய ஆலோசனைப்படியே அவர் கால்களை தூக்கி வைத்திருந்ததாகவும், கிளிநொச்சியின் பின்தங்கிய பகுதிகளில் பணியாற்ற ஏனைய வைத்தியர்கள் பின்னடிக்க, இந்த வைத்தியர், மனமுவந்து பணியாற்றியதாகவும் அடாவடி வைத்தியருக்கு ஆதரவான நெட்டிசன்கள் பகிர்ந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனாலும் போர்க் காலத்தில் கிளிநொச்சி மாவட்டவைத்தியசாலையாகவே மாற்றப்பட்டு சேவையாற்றிக்கொண்டிருந்த அக்கராயன் குளம் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து மக்களுக்கு தெரிவிக்கவேண்டியது தமிழ்ப்பக்கத்தின் கடமை என நாம் உணர்வதால் இந்த சிறப்புப் பதிவு.
முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். கிளிநொச்சியின் உள்ளூர் கிராமங்களிற்கு செல்வதற்கு முறையான போக்குவரத்த வசதியில்லாத காலமொன்றிருந்தது. அதனால், பின்தங்கிய பகுதிகளாக அவை அப்போது குறிப்பிடப்பட்டிருந்தன. எனினும், இப்பொழுது கிளிநொச்சியில் பின்தங்கிய பகுதிகள் என்று எதுவுமில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வாழும் பகுதிகள் இருக்கலாம். ஆனால், பின்தங்கிய பகுதிகள் இல்லை.
முறையான போக்குவரத்து, தங்குமிட வசதிகள் அரச உத்தியோகத்தர்களிற்கு உள்ளது- குறிப்பாக வைத்தியர்களிற்கு. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா பகுதிகளிலிருந்து தெற்கிற்கு செல்ல சொகுசு பேருந்து மார்க்கங்கள் உள்ளன. இலகுவான புகையிரத மார்க்கமுள்ளது. எல்லா பகுதிகளிலும் முறையான வசதிகளுடன் வைத்தியர் தங்குமிடங்கள் உள்ளன.
அதனால் அடாவடி வைத்தியருக்கு ஆதரவளிக்கும் நெட்டிசன்கள் சொல்வது போல, கிளிநொச்சியில் வைத்தியர்கள் பணியாற்ற பின்னடிக்கும் இடங்கள் என எதுவுமில்லை. அடுத்ததாக, ஒப்பீட்டளவில் தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் வைத்தியர் பற்றாக்குறையும் இல்லை. இந்த பின்னணியில், அக்கராயன் வைத்தியரின் கடமையுணர்ச்சியை மெச்சும் நெட்டிசன்களின் விதந்தோதல்கள் ‘வெறும் டெம்லேட்’ பதிவுகளாகவே எஞ்சுகிறது.
அந்த வைத்தியர் கடமையுணர்ச்சியுடன் பணியாற்றுபவராக இருக்கலாம். ஆனால், யாரும் கடமையாற்ற பின்னடிக்கும் இடத்தில் கடமையாற்றுகிறார் என்பது கொஞ்சமல்ல, நிறையவே ‘பில்டப்’தான்.
கடமையுணர்ச்சியென்பது என்ன?
அக்கராயன் வைத்தியரின் புகைப்படத்தை பார்ப்பவர்களிற்கு, வைத்தியத்துறைக்கு தேவையான ‘சிஸ்டம் சேன்ஞ்’ பற்றிய சிந்தனை கட்டாயம் தோன்றியிருக்கும்.
நமது வைத்தியத்துறைக்கும், பொதுமக்களிற்குமிடையிலான உறவு சிக்கலானது. வைத்தியத்துறை அதிக கௌரவமானதாகவும், வருவாயீட்டும் தொழிலாகவும் உள்ளது. வைத்தியர்களை சேவையாளர்கள் என குறிப்பிட்டு, அதீத பக்தி உணர்வுடனேயே நமது சமூகம் அணுகுகிறது. ஆனால் வைத்தியர்கள் சமூகத்தை எப்படி அணுகுகின்றனர்?
வைத்தியர்கள் சேவையாளர்கள் என்பது சம்பிரதாயமான சொல்லே தவிர, அது உண்மையான அர்த்தமுடையதல்ல. வைத்தியர்களும் ஒரு தொழிலாளர்களே. ஏனைய துறைகளை போலவே, அவர்கள் ஆற்றும் பணிக்குரிய ஊதியத்தை மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசு வழங்குகிறது.
இலங்கையின் இலவசக் கல்வியின் மூலமே ஒரு வைத்தியர் உருவாகிறார் அதாவது பொதுமக்களின் வரிப்பணத்தின் மூலம், அரசு நடைமுறைப்படுத்தும் இலவச கல்விமுறை ஒரு வைத்தியரை உருவாக்குகிறது. ஒரு வைத்தியர் ஏனைய அரச சேவையாளர்களை விட பல சௌகரியங்களை அனுபவிக்கிறார்கள். பொதுமக்களினால் அதீத கௌரவமாக அணுகப்படுகிறார்கள். எனினும், வைத்தியத்துறை நடைமுறை பதில் மரியாதையை பொதுமக்களிற்கு வழங்குகிறதா என்பது மிகப்பெரிய கேள்வி?
இதில் சுட்டிக்காட்டும் விடயங்களிற்கு மாறாக மனித நேயத்துடன் நோயாளர்களுடன் பரிவாக நடந்துகொள்ளும் பல வைத்தியர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு அமைப்பாக வைத்தியத்துறை எப்படி இயங்குகிறது என்பதையே நாம் இங்கே சுட்டிக்காட்ட விழைகிறோம்.
அரச வைத்தியசாலைகளிற்கு செல்லும் பெரும்பாலான நோயாளிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நாம் விபரிக்க வேண்டியதில்லை.
விதி விலக்கான வைத்தியர்கள், தாதியர்கள் இருந்தாலும் ஒரு அமைப்பாக வைத்தியசாலை நடைமுறைகள் பெரும்பாலும் நோயாளிகளை அவமதிப்பவை துச்சமென மதிப்பவை. வைத்தியர்களின் பேச்சுக்கள், அவர்களிடம் தம் சந்தேகங்களைக் கேட்க பயம் போன்றவற்றையே நோயாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பல வைத்தியசாலைகளில் பல நோயாளர்கள் தமக்குரிய நோய் என்னவென்றும் அதற்கான சிகிச்சைகள் என்னவென்றும் தெரியாமலே சிகிச்சை பெறுவர். அதை புரிய வைக்க வைத்தியர்களிற்கும் நேரமிருப்பதில்லை. அதற்கான பொறுமையுமிருப்பதில்லை.
இன்றைக்கு இலங்கையில் வைத்தியத்துறை சிகிச்சையளித்தல் என்பதையும் தாண்டி பணமீட்டுதலை மட்டுமே பிராதானமாகக் கருதும் ஒரு துறையாக உருவாகியுள்ளது என்பதற்கு, நாட்டில் உருவாகியுள்ள தனியார் வைத்திய நிலையங்களின் எண்ணிக்கையும் அங்கே நடத்தப்படுகின்ற தேவையற்ற பணம் பறிக்கும் நோக்கிலான உடற்பரிசோதனைகளுமே சான்று. அது தனிக் கட்டுரையாக பேசுமளவிற்கு விரிவானது. அதனால் அதனை இங்கு தவிர்த்து விடுகிறோம்.
எனினும், பொதுமக்களை மரியாதையாக நடத்த வேண்டிய வைத்தியத் துறை அதை முறையாக செய்கிறதா? அல்லது அப்படிப்பட்ட சம்பவங்கள் வெளிப்படுத்தப்படும் போது . சம்பந்தப்பட்ட நபர்களை சரியான விசாரணைக்குட்படுத்துகிறதா? அல்லது காப்பாற்ற முயற்சி எடுக்கிறதா என்பது மில்லியன் டொலர் கேள்வி.
உதாரணமாக கரவெட்டி பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அங்கு சிகிச்சைக்கு வருபவர்களிடம்- எவ்வளவு முதியவர்களாக இருந்தாலும்- ஒருமையில் பேசியே, அணுகுவார். இது குறித்து பல மாதங்களின் முன் ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால், இன்று வரை அவர் மீதுஎந்த விதமான துறைசார்ந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவுமில்லை ஊடகங்களில் செய்தி வந்து விட்டதே என்பதற்காக வைத்தியரும் தன் நடைமுறைகளை மாற்றிக்கொள்ளவுமில்லை இன்னமும் அவர் நோயாளர்களிடம் மரியாதைக் குறைவாகவே நடந்து கொள்கிறார்.
சில அணுகுமுறைகள் சிலரது இயல்புகள். அந்த வைத்தியரின் இயல்பு அதுவென சுகாதார திணைக்களம் கருதியிருக்கலாம். அல்லது, அவர் எப்படி நடந்தால்தான் என்ன, ஒழுங்காக சிகிச்சையளித்தால் சரியென அவர்கள் நினைத்திருக்கலாம். இந்த கட்டுரையில் இதனைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். ஒரு வைத்தியர் அல்லது பொதுத்துறையில் பணியாற்றும் எந்தவொருவரும், எனது இயல்பு இதுதான், எனக்கு இதுதான் சௌகரியம் என நடக்க முடியாது.
மக்களின் வரிப்பணத்தில் இலவசக்கல்வியின் மூலம் வைத்தியராகி அதே மக்களின் வரிப்பணத்தில் இருந்து மாதாந்த சம்பளம் பெறும் வைத்தியர்கள் பொதுமக்களிற்கு, கடமையிடத்தில் உரிய மரியாதை கொடுக்கவேண்டும். அதுவும் கடமையின் ஒரு பகுதியே. தனியே நேரம் தவறாமையோ, சிகிச்சையை சரியாக வழங்குவதோ மட்டும் கடமையல்ல.
அக்கராயன் வைத்தியர் விடயத்திற்கும் இதுதான் பொருந்தும்.
அக்கராயன் வைத்தியரின் காலில் உபாதையிருந்தது, அதனால் மேசையில் தூக்கி வைத்திருந்தார் என்பது, எந்தவகையில் சரியான தர்க்கம் என்பது தெரியவில்லை. கால் உபாதையுள்ள ஒருவரை, கால்களை உயர்த்தி வைத்திருக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை கூறுவார்கள். அது சாதாரணமான விடயம். அதற்காக கடமையிடத்தில் மேசையின் மேல் கால்களை தூக்கி வைத்திருப்பது அத்துமீறல்.
அக்கராயன் வைத்தியர் கால்களை கீழே விட முடியாது என்றால், விடுமுறையில் சென்றிருக்கலாம். அவர் விடுமுறையில் செல்லமுடியாத அளவிற்கு கடமையுணர்ச்சி கொப்பளிப்பவர் என்றால் அவர் செய்திருக்க வேண்டியது- தனது மேசைக்கு கீழே ஒரு ஏற்பாட்டை செய்து, வெளியே தெரியாமல் கால்களை உயர்த்தி வைத்திருப்பதைத்தான். வேறு எந்த வைத்தியர், அரச உத்தியோகத்தர் என்றாலும் அதைத்தான் செய்திருப்பார்.
மேசையின் மேல் கால்களை வைத்திருந்தால்தான் வலி தெரியாதென்றால், உண்மையில் அவர் விடுமுறை பெற்று வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுவிட்டு, கடமைக்கு வந்திருக்க வேண்டும்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு
இதேவேளை, அக்கராயன் வைத்தியசாலை வைத்தியரின் சர்ச்சை உருவானதை தொடர்ந்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது மற்றொரு குறிப்பிட்ட வைத்தியரைப் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து, அந்த வைத்தியரை பொதுமக்களிற்கு சிகிச்சையளிப்பதிலிருந்து விடுவித்து, வேறு நிர்வாக கடமைகளில் ஈடுபடுத்துமாறு தாம் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவித்தனர். அவர் கால் உபாதை தவிர்ந்த வேறொரு சிகிச்சையும் பெற்று வந்ததாகவும்,( வைத்தியரின் தனியுரிமை கருதி என்னவகையான சிகிச்சை என்பதை கூறாது தவிர்க்கிறோம்) அதனால் நோயாளிகளிற்கு சிகிச்சையளிக்காமலிருப்பதே பொருத்தமானது என கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பரிந்துரைத்ததாகத் தெரிவித்தனர்.
அக்கராயன் வைத்தியர் விவகாரத்தில் நோயாளர்களுடன் நேரடித் தொடர்பற்ற பணிகளை வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்ட பின்னரும் குறித்த வைத்தியரை நோயாளரைப் பரிசோதிக்கும் பணியில் தொடர்ந்தும் வைத்திருந்த கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரே முழுமையாக பொறுப்புக் கூறவேண்டியவர் என அரச வைத்திய சங்கத்தினர் தமிழ்ப்பக்கத்திடம் தெரிவித்தனர்.
கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு
அக்கராயன் வைத்தியர் சங்கத்தினரின் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு பேசியது. இதன்போது, அக்கராயன் வைத்தியர் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தன்னிடம் எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென மறுத்தார்.
அத்துடன், அக்கராயன் சர்ச்சை தொடர்பிலும் விளக்கமளித்தார்.
‘புதுவருட பண்டிகை காலத்தில் பல வைத்தியர்கள் விடுமுறையில் சென்றிருந்தனர். வைத்தியசாலைகளில் வைத்தியர்களை ஒழுங்குபடுத்துவதில் பெரிய சிரமப்பட்டோம். அக்கராயனில் சர்ச்சைக்குள்ளான வைத்தியர் மட்டக்களப்பை சேர்ந்தவர். அவர் விடுமுறையில் சென்றிருந்தார். அவரை தொடர்பு கொண்டு, எப்பொழுது விடுமுறை முடிவடைகிறதென வினவியிருந்தேன். மறுநாள் காலையில் அவர் கடமையிலிருந்தார். அந்த வைத்தியர் மிகுந்த கடமையுணர்ச்சி மிக்கவர்.
அவர் மேசையில் கால்களை தூக்கி வைத்துள்ள புகைப்படம் வெளியானதை தொடர்ந்து, நான் அங்கு சென்றேன். அந்த வைத்தியரின் கால்களை பார்த்து பயந்து விட்டேன். அவ்வளவு மோசமாக இருந்தது. அந்த வைத்தியசாலையிலேயே அவருக்கு சிகிச்சையளித்தோம்.
அவர் கடமையுணர்ச்சி மிக்கவர். கொரோனா காலத்தில் 6 மாதங்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றினார். அதனால் அவர் மீதான துறைசார் போட்டியுள்ளது. அதுதான் இந்த விடயங்கள் சர்ச்சையாக காரணம் என்றார். பொதுமக்களிற்கு சிகிச்சையளிப்பதிலிருந்து அவரை விடுவிக்குமாறு கோரியதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்த தகவல் தொடர்பில் கேட்ட போது,
‘அவர் சிகிச்சையளிப்பதிலோ, நோயாளிகளை அணுகுவதிலோ எந்த குறையுமிருப்பதாக எமக்கு முறைப்பாடு வரவில்லை. அக்கராயன் வைத்தியசாலை பணியாளர்களும் குறிப்பிட்ட வைத்தியர் மீது நல்லபிப்பிராயத்தையே தெரிவித்தனர் என்றும் இக்காரணங்களால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது போன்று குறித்த வைத்தியரை மாற்றும்படியான கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
எனினும், அவர் இன்னொரு வைத்தியரின் கண்காணிப்பின் கீழ்த்தான் செயற்பட கூடியவர். அப்படித்தான் தற்போது செயற்பட்டு வருகிறார்.
சர்ச்சைக்குரிய புகைப்படத்தில் அவருக்கு அருகில் உள்ள நோயாளி நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்தவர். சிகிச்சை தொடர்பான ஆலோசனைக்காகவே தனது பொறுப்பு வைத்தியரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதே, அவரது கையில் தொலைபேசியுடன் புகைப்படம் வெளியானது” என்றார்.
இதேவேளை, அக்கராயன் வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கமும், வைத்தியரின் சேவை, நடத்தை குறித்து திருப்தி வெளியிட்டிருந்தது.
வைத்தியத்துறை சார்ந்தவர்களின் குற்றச்சாட்டுக்கள் விளக்கங்களிற்கு அப்பால், சேவை பெற வரும் பொதுமக்களிற்கு கௌரவமளிப்பது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரின் கடமையும் பொறுப்பும் ஆகும் அதற்கு வைத்தியர்களும் விலக்கானவர்கள் அல்ல. அதிலும் குறிப்பாக கிராமப்புற வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள் தங்களைக் குறுநில மன்னர்களாகக் கருதிக் கொண்டுசெயற்படுவது கண்டிக்கத் தக்கது. ஏனெனில் இதே வைத்தியர் வேறோரு நகர்ப்புற வைத்தியசாலையில் பணியாற்றியிருந்தால் இவ்வாறு நடந்துகொண்டிருப்பாரா எனும் கேள்வி நம்முள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
குறித்த அக்கராயன் குள வைத்தியரின் நடத்தைகள் நிச்சயம் ஒழுக்காற்று நடவடிக்கைக்குள்ளாக்கப்பட வேண்டியவை. மாறாக துறைசார் சொற்களினூடாக காப்பாற்றப்பட வேண்டியவை அல்ல. கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் இனிமேலாவது பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும்.




