அரசாங்கம் பொதுமக்களின் குரல்களை தொடர்ந்தும் புறக்கணிக்க தீர்மானித்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருப்பார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“பொதுமக்களின் குரல்களைப் புறக்கணித்து, தொடர்ந்து ஆட்சியில் இருக்க அரசாங்கம் முடிவெடுத்தால், பெரமுனவின் பலர் உட்பட 50 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருப்பார்கள்” என்று அவர் கூறினார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாளை (05) பாராளுமன்றம் கூடும் போது, அரசாங்கம் 113 ஆசனங்களில் பெரும்பான்மையை இழக்கும் என்பதை மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள் என அவர் மேலும் எச்சரித்தார்.
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளதாகவும், பிரதமர் தொடர்ந்து பதவியில் இருப்பார் என்றும் தினேஷ் குணவர்த்தன நேற்று அறிவித்த பின்னர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு, தற்போதைய நிர்வாகத்தின் தவறான முகாமைத்துவமே காரணமென குற்றம்சாட்டி, ஜனாதிபதியை பதவிவிலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதை தொடர்ந்து, நேற்று அமைச்சரவை அமைச்சர்கள் பதவிவிலகியதாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். எனினும், பிரதமர் பதவியில் நீடிக்கிறார். இது அமைச்சரவை கலைந்ததாக அர்த்தப்படாது. தவிரவும், பதவிவிலகல்களை ஜனாதிபதி ஏற்றாரா என்பதும் தெரியவில்லை.
இதேவேளை, அமைச்சரவை மாற்றமல்ல, ஆட்சி மாற்றமே தேவையென போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
பொதுமக்களின் போராட்டங்களை ஒடுக்க அவசரகால சட்டம், ஊரடங்கு சட்டம், சமூக ஊடக தடையென பல வழிகளிலும் அரசு முயற்சித்தாலும், அது வெற்றியடையவில்லை.
இலங்கைக்குள் நடந்த போராட்டம், தற்போது அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், மாலைதீவு, நியூசிலாந்து என பல நாடுகளிற்கும் பரவியுள்ளது. அங்குள்ள இலங்கையர்கள், இலங்கைத் தூதரகங்களின் முன்பாக போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில், அமைச்சரவை அமைச்சர்களின் விலகலின் முழுமையான அர்த்தம் இதுவரை புலப்படாத நிலையில், நிமல் லான்சா மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.




