ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் மிக விரைவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன.
பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கோட்டாபய ‘இராணுவ வேகத்தில்’ சில நடவடிக்கையெடுத்துள்ளார்.
இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பல்வேறு விடயங்களை கூட்டமைப்பினர் குறிப்பிட்டு பேசியிருந்தனர். அரசியல் கைதிகள் விடயம், காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டன.
இதில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு குறித்தும் பேசப்பட்டது.
இராணுவத்தினரின் காணி சுவீகரிப்பு தொடர்பில் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டிய போது, இந்த விடயம் தனக்கு தெரியாது என்ற பாவனையை ஜனாதிபதி முகத்தில் வெளிப்பட்டதை தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.
‘இராணுவத்தினர் காணி சுவீகரிக்கிறார்களா? அவர்களிற்கு எதற்கு காணி?. நான் இதை அறியவில்லை’ என ஜனாதிபத வாய்விட்டே கேட்டிருந்ததையும் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
இந்த சந்திப்பு மதியம் 1 மணியளவில் முடிந்தது.
சில மணித்தியாலங்களில் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, தொலைபேசி வழியாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை தொடர்பு கொண்டு பேசிள்ளார்.
‘இராணுவத்தினர் காணி சுவீகரிப்பதாக நீங்கள் (கூட்டமைப்பினர்) ஜனாதிபதியிடம் கூறியுள்ளீர்கள். அவர் எம்மை பேசுகிறார். நாம் காணி சுவீகரித்தோமா?’ என கேட்டுள்ளார்.
இராணுவத்தினர் சுவீகரித்த காணி பற்றிய விடயங்கள் தம்மிடம் உள்ளதாகவும், தேவையெனில் அதனை இராணுவத்தளபதியிடம் தரலாமெனஎம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
இராணுவத்தினர் சுவீகரித்துள்ள காணி பற்றிய விடயங்களை, தளபதியிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு இப்பொழுது கூட்டமைப்பினரிடம்.
இராணுவத்தளபதி மனதில் எதை வைத்துக் கொண்டு பேசினார் என தெரியவில்லை. ஒருவேளை, யுத்தத்தின் போது சுவீகரித்ததை சட்டரீதியாக பெற இப்போது அளவீடு செய்கிறோம், புதிதாக எதையும் சுவீகரிக்கவில்லையென கருதுகிறாரோ தெரியவில்லை.
இரண்டு தரப்பும் இனி நேரில் பேசும்போதுதான் இந்த விடயங்கள் வெளிப்படும்.




