இலங்கையின் பொருளாதார நிலை குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த டிசம்பர் 10ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றத்தில் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய நிலையில், எந்தவொரு அமைச்சரையும் சபையில் அறிக்கை விடுமாறு வற்புறுத்துவதற்கு தனக்கு உரிமையில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு எம்.பி., மூன்று மாதங்களுக்கு அமர்வுகளில் பங்கேற்கத் தவறினால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான விதிகள் உள்ளன என்பதையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.
அமைச்சர் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்து தேசிய பொருளாதாரம் தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்து மூன்று மாதங்களாகியுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்திய போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.
“இலங்கை திவாலாகி விட்டது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை. அவர்தான் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக வேறு உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றனர். இன்று மார்ச் 10, அவர் அறிக்கை வெளியிட்டு மூன்று மாதங்கள் ஆகிறது. நிதி அமைச்சரைச் சபைக்கு வரச் சொல்லுங்கள். இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்குக் கட்டளை அனுப்புங்கள்” என கிரியெல்ல தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் நிதியமைச்சர் சார்பாக இராஜாங்க அமைச்சர் பதிலளித்துள்ளார் என எதிர்க்கட்சி பிரதம கொறடா கூறுவதில் உண்மையில்லை என அவைத்தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
” கிரியெல்ல கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அதே வாதத்தை மீண்டும் கூறுகிறார்,” என்று அவர் கூறினார்.
பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பசில் ராஜபக்ச வெளியிடும் அனைத்து அறிக்கைகளும் சபையில் விவாதிக்கப்பட்டதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
யுத்த சூழ்நிலையிலும் உக்ரைன் ஜனாதிபதி கூட அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பசில் ஏன் பாராளுமன்றத்திற்கு வந்து கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பம்முகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.




