♦ரஷ்ய, உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் துருக்கியில் சந்திக்க உள்ளனர்.
♦ஹங்கேரி தனது பிரதேசத்தில் இருந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவதை தடை செய்கிறது.
♦தலைநகரை கீவ்வை சூழ கடுமையான சண்டைகள் நடந்து வருகிறது.
♦ரஷ்யா- உக்ரைன் 3வது சுற்று பேச்சு இன்று நடைபெறும்
ரஷ்ய, உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் மார்ச் 10ஆம் திகதி துருக்கியில் சந்திக்க உள்ளனர்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் துருக்கியின் கடலோர அண்டலியா மாகாணத்தில் சந்திக்க ஒப்புக்கொண்டதாக துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு தெரிவித்தார்.
ஹங்கேரி தனது பிரதேசத்தில் இருந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவதை தடை செய்கிறது.
இந்த முடிவை பிரதமர் விக்டர் ஓர்பன் சிறப்பு காணொளி உரையில் குறிப்பிட்டார்.
மார்ச் 8 ஆம் திகதி லண்டனில் போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா தலைவர்களை சந்தித்து உக்ரைன் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்கும்.
தலைநகர் ‘கெய்வைச் சுற்றி கடுமையான சண்டை இடம்பெற்று வருகிறது. முக்கியமாக வடமேற்கு பகுதியில் தலைநகரை ரஷ்யத் துருப்புக்கள் நெருங்கியுள்ளன.
“அதிக கோபத்துடன், புச்சா, ஹோஸ்டோமல், வோர்சல், இர்பின் ஆகியன அழிக்கப்படுகிறது. அவர்கள் வேண்டுமென்றே பொதுமக்களைக் கொல்கிறார்கள்” என்று கிய்வ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறினார்.
உக்ரைனில் ரஷ்யப் படைகளின் தீவிர தாக்குதலிற்கு உள்ளாகியுள்ள நகரங்களில் மனிதாபிமான நடைபாதையை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று திங்களன்று காலை 10 மணி முதல் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி உட்பட பல உக்ரேனிய நகரங்களிற்கு மனிதாபிமான உதவிகள் சென்று சேர வசதியாக மனிதாபிமான நடைபாதை உருவாக்கப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஏற்கனவே மரியுபோலில் ரஷ்யா இப்படியான மனிதாபிமான நடைபாதை உருவாக்கியிருந்தது. இதன்மூலம் மக்கள் வெளியேறலாமென அறிவித்திருந்தது. எனினும், போர் வலயத்திலிருந்து மக்கள் தப்பிச்செல்ல உக்ரைன் அனுமதிக்கவில்லை. இதனால், அந்த திட்டம் வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையில், இன்று மீண்டும் பல நகரங்களில் மனிதாபிமான நடைபாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்த நகரங்களின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டும், பிரான்ஸ் ஜனாதிபதிஇம்மானுவேல் மக்ரோனின் தனிப்பட்ட வேண்டுகோளின் பேரிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உக்ரைன்முக்கிய உணவுப்பொருள் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது!
கம்பு, ஓட்ஸ், பக்வீட், தினை, சீனி, உப்பு, இறைச்சி மற்றும் கால்நடைகளின் ஏற்றுமதியை நிறுத்துவதென உக்ரைன் முடிவெடுத்துள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கையை நேற்று (6) அரசு எடுத்தது.
அவுஸ்திரேலிய ஏவுகணைகள் உக்ரைனில்!
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் உக்ரைனிற்கு வழங்கப்பட்ட இராணுவ உதவிப் பொருட்கள், உக்ரைனை சென்றடைந்ததாக, பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்தார்.
ரஷ்யாவை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு 50 மில்லியன் டொலர் ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் பிற இராணுவ சாதனங்களை வழங்குவதாக கடந்தவாரம் அவுஸ்திரேலியா அறிவித்தது.
இன்று திங்கள்கிழமை கருத்து தெரிவித்த பிரதமர் ஸ்கொட் மொரிசன், “எங்கள் ஏவுகணைகள் இப்போது களத்தில் உள்ளன.” என்றார்.
ரஷ்யா மற்றும் சீனாவின் நெருங்கிய உறவை மூலோபாயத்திற்கு பதிலாக சந்தர்ப்பவாதமாக அவர் விவரித்தார், கூட்டணியை “எதேச்சதிகாரத்தின் வளைவு” என்று முத்திரை குத்தினார்.
ரஷ்யாவும் சீனாவும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடைமுறையில் உள்ள ஒரு உலக ஒழுங்கிற்கு பதிலாக புதிய உலக ஒழுங்கை விரும்புவதாக அவர் கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் சீனா கண்டிக்காததுடன், மற்ற நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் போது ரஷ்ய கோதுமை வர்த்தகத்தை சீனா விரிவுபடுத்துவதையும் மொரிசன் விமர்சித்தார்.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை வலுப்படுத்துமாறு மேற்குலக நாடுகளுக்கு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு வீடியோ அறிக்கையில், உக்ரைனின் இராணுவ-தொழில்துறை வளாகத்தை தாக்கப்போவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் முந்தைய அறிவிப்புக்கு மேற்கத்திய தலைவர்கள் பதிலளிக்கவில்லை என்றுஜெலன்ஸ்கி விமர்சித்தார்.
“ஒரு உலகத் தலைவர் கூட இதற்கு எதிர்வினையாற்றுவதை நான் கேட்கவில்லை” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
“ஆக்கிரமிப்பாளரின் துணிச்சல், ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் போதுமானதாக இல்லை என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும். அத்தகைய குற்றங்களுக்கு உத்தரவிடுபவர்களை நீதிக்கு கொண்டு வர “தீர்ப்பு மன்றத்தை” ஏற்பாடு செய்ய வேணடும்” என ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
“ஆக்கிரமிப்பாளர்களின் தண்டனையின்மை உணர்வைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், அத்தகைய திட்டமிட்ட அட்டூழியங்களை அவர்கள் அறிவிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அதன் படைகள் உக்ரைனின் இராணுவ-தொழில்துறை வளாகத்தை “துல்லியமான” ஆயுதங்கள் மூலம் தாக்க உத்தேசித்துள்ளதாகவும், அப்படியான இடங்களிலுள்ள ஊழியர்களை வெளியேறுமாறு வலியுறுத்தியது.
உக்ரேனிய நகரமான ஒடேசாவில் அல்லது அதற்கு அருகாமையான பகுதிகள் உடனடி◌ாக ரஷ்யப் படைகளிடம் வீழ்ச்சியடையுமென அமெரிக்கா நம்பவில்லை.
நகரத்தின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற கவலை அதிகரித்து வரும் நிலையில், மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இதனை கூறியுள்ளார்.
அடையாளத்தை வெளிப்படுத்தாத அந்த அதகாரியை மேற்கோளிட்டு ரொய்ட்டர்ஸ் இதனை தெரிவித்து;ளது.
ரஷ்யா தனது படையெடுப்பு தொடங்கியதில் இருந்து சுமார் 600 ஏவுகணைகளை ஏவியது என்றும், போருக்கு திட்டமிட்டு உக்ரைனிற்கு வெளியே அது நிறுத்திய படைகளில் 95 சதவீதத்தை உக்ரைனுக்குள் நிலைநிறுத்தியுள்ளது என்றும் மதிப்பிட்டுள்ளார்.
ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி, கெய்வ், கார்கிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகியவற்றைத் தனிமைப்படுத்த முயற்சித்து வருகின்றன, மேலும் “வலுவான உக்ரேனிய எதிர்ப்பை” சந்திக்கின்றன என்று அந்த அதிகாரி கூறினார்.
மத்திய உக்ரைனில் உள்ள வின்னிட்சியாவில் உள்ள விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய ஏவுகணைகள் சரமாரியாக தாக்கி அழித்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“வின்னிட்சியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி எனக்கு இப்போதுதான் தகவல் கிடைத்தது. எட்டு ரொக்கெட்டுகள் … விமான நிலையம் முற்றிலும் அழிக்கப்பட்டது,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
வின்னிட்சியா மத்திய உக்ரைனின் மேற்குப் பகுதியில்- கருங்கடலிற்கு அண்மையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் எல்லைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
கருங்கடலிலிருந்து 8 ஏவுகணை ஏவப்பட்டதாகவும், 5,500 கிமீ வரை சென்று தாக்கவல்ல அநேகமாக X-101s ஏவுகணைகளே அவையென உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.




