கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார துறைக்கே இழுக்கை ஏற்படுத்தும் வகையில்
தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் கண்டாவளை வைத்திய அதிகாரிக்கு எதிராக
உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அது தொடர்பில் தனக்கு அறியத்தருமாறு
பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்கள் சுகாதார துறை பணிப்பாளர்
நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
02.02.2022 திகதியிடப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரால் எழுதப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கண்டாவளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றும் வைத்திய அதிகாரி தனது தனிப்பட்ட நலன்களையும், சுய விளம்பரப்படுத்தலையும் நோக்காகக் கொண்டு நான் அவருடன் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவினை ஊடகங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்தியுள்ளமை எனது சிறப்புரிமையை மீறுவதாகவும் தனிப்பட்ட
நற்பெயருக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளது
குறித்த வைத்தியரின் சகோதரனும் எனது நண்பருமான வைத்தியர் சயந்தகுமார்
என்னுடன் தொலைபேசி மூலம் உரையாடி உளவியல் ரீதியாக தாக்கம் அடைந்துள்ள
தனது சகோதரியோடு கலந்துரையாடுமாறு என்னை மிக வினயமாக கேட்டுக்
கொண்டதற்காக 27.01.2022 திகதி மாலை அவருடன் தொடர்பு கொண்டு உரையாடி
இருந்தேன்
நல்லெண்ண நோக்கில் நான் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை எனது அனுமதி இன்றி பதிவு செய்து அன்றைய தினமே அதனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள்
வாயிலாக பகிரங்கப்படுத்தி இருப்பது எனது கௌரவத்திற்கும் இழுக்கை
ஏற்படுத்தியுள்ளது
எனவே மேற்படி தொலைபேசி உரையாடலை எனது அனுமதி இன்றி பதிவு செய்தமைக்கும்
அதனை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தியமைக்கும் எதிராக உடனடி நடவடிக்கை
எடுப்பதோடு, முழுக்க முழுக்க தனது சுய விளம்பரபடுத்தலை மையமாகக்கொண்டு
கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத் துறைக்கு இழுக்கை ஏற்படுத்தும்
வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் கண்டாவளை சுகாதார வைத்திய
அதிகாரி மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அது தொடர்பில் எனக்கு அறியத்
தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் அக் கடிதத்தில்
எழுதியுள்ளார்.





