ஜனாதிபதியின் உரையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சமாதானம் மலர்ந்ததாக கூறியிருந்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது உண்மை. ஆனால் சமாதானம் மலரவில்லை. யுத்தம் ஆரம்பித்ததற்கான காரணிகள் அதே நிலையில் தான் உள்ளது. அந்த காரணிகளுக்கு சரியான தீர்வு கொண்டு வராமல் சமாதானம் மலர்ந்ததாக கூறமுடியாது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்க உரையின் மீதான விவாதத்தில் நேற்று (19) .உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அவர்களின் கொள்கை பிரகடன உரை தமிழ் தேசிய இனப்பிரச்சனை சம்பந்தமாக எதுவுமே கூறப்படவில்லை. அத்துடன் வடக்கு கிழக்க மக்கள் பிரதிநிதிகள் தமது கொள்கைகளை ஓரங்கட்டிவிட்டு தனது செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தரவேண்டும் என தெரிவித்த இருக்கின்றார்.
எமது கொள்கைகள் எனது எமது மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பது தான். சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு என்பதனை தெளிவாக கூறி வந்திருக்கின்றர்கள். அதனை ஓரங்கட்டிவிட்டு அபிவிருத்தி செய்வதில் எந்த பயனுமில்லை.
தற்போது இந்த நாட்டில் பொருளாதார பின்னடைவுக்கு கொரோன காரணமாக உள்ளது. இதனை நாங்கள் மறுக்கமுடியாது. அதனை விட முக்கியமாக எமது மக்களின் இனப்பிரச்சனையும் அதனால் ஏற்பட்ட யுத்தம் மற்றும் இழப்புக்களும். எமது பிரச்சனைக்குத் தீர்வை எட்டாது நாடு நிலைபேறான அபிவிருத்தியை அடைய முடியாது. எனவே நியாயமான தீர்வை காணுவதை தான் முக்கியமானதாக கொள்ள வேண்டும்.
ஜனாதிபதியின் உரையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சமாதானம் மலர்ந்ததாக கூறியிருந்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது உண்மை. ஆனால் சமாதானம் மலரவில்லை. யுத்தம் ஆரம்பித்ததற்கான காரணிகள் அதே நிலையில் தான் உள்ளது. அந்த காரணிகளுக்கு சரியான தீர்வு கொண்டு வராமல் சமாதானம் மலர்ந்ததாக கூறமுடியாது.
யுத்தம் மிகப்பெரிய அழிவை எமது பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய பாரிய அபிவிருத்திகளை எமது பகுதிகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனை கொழுப்பில் இருந்து திட்டமிடுவதனுடாக அவ் அபிவிருத்தி எமது மக்களுக்கு பயனைப் பெற்றுக் கொடுக்க முடியாது. முக்கியமாக அந்த மக்களின் பங்களிப்புடனும் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளுடனும் அங்கிருக்கின்ற நிலைமைகளை புரிந்து செயற்பட வேண்டும். ஆகவே தான் எங்களுடைய பகுதிகளில் எமது மக்கள் தங்களின் அலுவல்களை தாங்களே பார்க்ககூடிய அளவிலான சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வுதான் இன்று இருக்ககூடிய ஒன்று.
இலங்கையின் அரசியலமைப்பில் 13ஆம் திருத்தச்சட்டம் உள்ளது. அது இலங்கை – இந்திய உடன்படிக்கையூடாக ஏற்படுத்தப்பட்டது. இந்த நாட்டில் உள்ள அரசியல் அமைப்பில் உள்ள விடயத்தை முழுமையாக அமுல்படுத்தாமலும் அமுல்படுத்த தயங்கும் ஒரு நாடு இலங்கையாகத்தான் இருக்கும்.
13ஆம் திருத்ததில் எமது பிரச்சனைகளுக்கான தீர்வு இல்லா விட்டாலும் நாங்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்வதற்கான நியாயம் இதில் இருக்கின்ற பல விடயங்களை மத்திய அரசு மீளப்பெற்று வருகின்றது. வைத்திய சாலைகளை தேசிய வைத்தியசாலைகளாகவும் பாடசாலைகளை தேசிய பாடசாகைளாகவும் மத்தியரசுக்கு கீழ் கொண்டு செல்கின்றது. அத்துடன் 13ஆம் திருத்தத்தை முழுமையாக அகற்றுவதற்கு அரசில் உள்ள பல சிங்களத் தலைவர்கள் விரும்புகின்றார்கள் என்பது எங்களுக்குத் புரிகின்றது. இதனால் தான் நாங்கள் 13ஆம் திருத்ததின் பங்காளியான இந்தியாவை கேட்கின்றோம். ஓப்பந்தத்தை தயாரிக்கும் போது கூட இது எமக்கான தீர்வாக அமையாது என வலியுறுத்தியிருந்தோம்.
13ஆம் திருத்தம் முழுமையாக இல்லாது செய்யப்பட்டால் நாங்கள் மீண்டும் பூச்சிய நிலைக்குச் தாழ்த்தப்பட்டு விடுவோம். முழுமையான சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு வரும் வரைக்கும் 13ஆம் திருத்தம் முழுமையாக அமுல் நடத்த வேண்டும் என இந்தியாயை கேட்பதற்கு நாட்டை ஆண்ட ஆளுகின்ற அரசுகள் தான் காரணம்.
இந்த அரசை பொறுத்தவரைக்கும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகவும் கடுமையாக உழைத்து வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகைறில் 85 வீதமான மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. இதன் மூலம் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதுடன் மரணங்களையும் கட்டுப்படுத்தியுள்ளது. இதற்காக இந்த அரசுக்கு பாராட்டுக்கள்.
அதே போல புதிய அரசியல் அமைப்பையும் கொண்டு வருபரினுடாக எமக்கான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் முயற்சிக்க வேண்டும். அவரது உரையில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான எவ்விதமான வேறுபாடுகளும் காணப்படவில்லை. ஆகவே சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதனுடாகத்தான் நாட்டில் நிரந்தர அமைதியையும் நிலைபேறான அபிவிருத்தியையும் எற்படுத்த முடியும்.




