பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் பல துப்பாக்கிகள் மற்றும் வாள்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.
பிலியந்தலையில் உள்ள குடியிருப்பில் இருந்து நான்கு கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவோல்வர், இரண்டு வாள்கள், ஒரு ரம்போ கத்தி மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
முன்னதாக, கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் வைத்து 65 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டியவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது அவர் பற்றிய தகவல்கள் தெரியவந்ததையடுத்து, ஓய்வுபெற்ற வைத்தியர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியர் தனியார் வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்ததாகவும், எம்பிலிப்பிட்டியவில் கைது செய்யப்பட்ட நபர் அந்த வைத்திய நிலையத்தில் பாதுகாவலராக கடமையாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனவரி 11 ஆம் திகதி கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பொரளை பொலிஸார் மற்றும் சிசிடியினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபருக்கு ஓய்வுபெற்ற வைத்தியரால் கைக்குண்டு வழங்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




