தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து இலங்கையால் சீன உரம் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில், 6.7 மில்லியன் டொலர்களை சீன கரிம உர நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள சீன உரக் கப்பலை மீளப் பெற்றுக்கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட செயல்திறன் உத்தரவாதத்தை பத்திரமாக வைத்தும், கடன் கடிதத்தின் விதிமுறைகள் மற்றும் இரு தரப்பினரின் ஒப்பந்தத்தின்படியும் உரக் கப்பலை மீண்டும் தனது நிறுவனத்திற்கு எடுத்துச் செல்ல சீன நிறுவனம் ஒப்புக்கொண்டது.
சீனாவின் கிண்டா ஓ பயோடெக் நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கரிம உரம் தொடர்பில் கொழும்பு வர்த்தக உர நிறுவனத்துக்கும் இலங்கை உர நிறுவனத்துக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கையை அமுல்படுத்தும் போது ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடியை தீர்த்து வைப்பதற்காக சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நீதி அமைச்சும் விவசாய அமைச்சும் இணைந்து நேற்று (13) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் மீது கவனம் செலுத்தி, சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய செயற்படுவதற்கு உரிய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்கவிடம் வினவியபோது, குறித்த சீன நிறுவனம் கொள்வனவுக்கு ஏற்ப உரங்களை வழங்காததால் பணத்தை செலுத்த முடியாதுள்ளது என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இராஜதந்திர உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.