மத்தள சர்வதேச விமான நிலையத்தால் ஆண்டுதோறும் 3.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நட்டத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், மத்தள விமான நிலையத்திற்கு வரும் விமானங்களுக்கு தரையிறங்கும் கட்டணத்திலிருந்து விலக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் ருவான் கொடிதுவக்கு கூறினார்.
இந்தத் தீர்மானத்தின் மூலம், 6 விமான நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தில் தமது விமானங்களை தரையிறக்கத் தயார் என தெரிவித்துள்ளன. தற்போது, வருடத்திற்கு 100,000 பயணிகள் மட்டுமே மத்தள விமான நிலையத்தை பயன்படுத்துகின்ற நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை 200,000 ஆக அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 17 கிலோமீற்றர் நீளமான பாதுகாப்பு வேலியும் பயன்பாட்டிற்கு உகந்த நிலையில் இல்லை என்பதையும், விமான நிலையத்தைக் காலத்திற்கேற்ப நவீனமயமாக்கி பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\




