1917 புரட்சியின் போது ரஷ்யாவின் ரோமானோவ் குடும்பத்தின் பாவனையிலிருந்த அரச நகைகளின் ஒரு பகுதியாக இருந்த இலங்கையின் நீல இரத்தினக்கல் பொறிக்கப்பட்ட காதணிகள் உள்ளிட்ட நகைகள் 806,500 சுவிஸ் பிராங்குகளுக்கு (இலங்கை ரூபாவில் 177139399.90) புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஜெனிவா ஏலத்தில் இது வரலாற்று சிறப்புமிக்க விலையென ஏற்பாட்டாளர்கள் கூறிள்ளனர். இந்த நகைகளின் மதிப்பீட்டை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
வாங்குபவர், டெலிபோன் மூலம் ஏலம் எடுத்துள்ளார். தனது அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை.
பெரிய வட்ட ப்ரூச் மற்றும் காதணிகள் பெருந்தொகைக்கு விலை போயின.
இந்த நகைகள் ரஷ்ய ஜார் (அலெக்சாண்டர் II) மன்னரின் மகன் விளாடிமிரின் மனைவி மரியா பாவ்லோவ்னாவுக்கு சொந்தமானது. அவர் கடைசி ரஷ்ய பேரரசர் இரண்டாம் நிக்கோலஸின் அத்தையாவார்.
1917 புரட்சியின் போது நாட்டிற்கு வெளியே கடத்தப்பட்ட ரஷ்ய அரச நகைகள், அரிய வண்ண வைரங்கள் ஜெனீவாவில் ஏலத்தில் விடப்பட்டன. இதில், இலங்கையின் நீல இரத்தினம் பொறிக்கப்பட்ட பெரிய வட்ட ப்ரூச் மற்றும் காதணிகளும் அடங்கும்.
மரியா பாவ்லோவ்னா நகைகளில் ஆர்வமுள்ளவர். பெருந்தொகை நகைகளை சேகரித்து வைத்திருந்தார். ரஷ்ய புரட்சியின் போது, 360 அறைகள் கொண்ட மதிப்புமிக்க நெவா கரையில் உள்ள விளாடிமிர் அரண்மனையில் தங்கியிருந்தார்.
பிரிட்டன் தூதர் ஆல்பர்ட் ஹென்றி ஸ்டாப்ஃபோர்ட், அவரது நண்பர். அவர் மூலமே நகைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன.
பிரிட்டிஷ் தூதர் ஸ்டாப்ஃபோர்ட் ஒரு வேலைக்காரர் போல உடை உடுத்திக் கொண்டு மரியா பாவ்லோவ்னாவின் வீட்டுக்கு சென்றார். பாவ்லோவ்னா, மூத்த மகன் போரிஸ் மற்றும் ஒரு நம்பகமான வேலைக்காரன் ஆகியோர் பழைய செய்தித்தாளில் நகைகளை மடித்து, ஸ்டாப்ஃபோர்ட்டிடம் கொடுத்து, பின்வாசல் வழியாக வெளியேற்றினர்.
செப்டம்பர் 26, 1917 அன்று பிரட்டிஷ் தூதருடன் மரியா பாவ்லோவ்னா 244 நகைகளை ஒரு பையில் சுமந்து கொண்டு லண்டனுக்கு புறப்பட்டார்.
லண்டனிலுள்ள வங்கியொன்றில் அவற்றை வைப்பிலிட்டார். பின்னர், 1920 இல் பிரான்சில் இறந்தார்.
அவரது ப்ரூச் மற்றும் காதணிகளை 2009 இல் ஏலத்தில் வாங்கிய ஒரு ஐரோப்பிய சுதேச குடும்பம் விற்கிறது என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.