உலகில் மிக நீண்ட காலம் முடக்கநிலையில் இருந்த அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு விரைவில் விடுதலை கிடைக்கவுள்ளது.
விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பர்னில் திட்டமிட்டதற்கு ஐந்து நாளுக்கு முன்பே முடக்கநிலை தளர்த்தப்படவுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள்.
நேற்றைய நிலவரப்படி, புதிதாக 1,900க்கும் அதிகமானோருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் உயிரிழந்தனர்.
ஆனால், 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை விக்டோரியா இந்த வாரம் எட்டக்கூடும்.
எனவே திட்டமிட்டபடி கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முயற்சிகள் தொடர்கின்றன.
இதேவேளை, நியூ சௌத்வேல்ஸ் மாநிலத்தில் நேற்று (18) மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
அந்த மாநிலத்தில், 16 வயதுக்கு மேற்பட்டோரில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியுள்ளதால் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வழியேற்பட்டுள்ளது.
பல மாதங்களுக்குப் பிறகு நேற்று முதல் மாணவர்களில் சில பிரிவினர் பாடசாலைகளுக்குத் திரும்பினர்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் மட்டும் பாடசாலை வளாகங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
மிகுந்த எச்சரிக்கையுடன் பாடசாலைகள் திறக்கப்படுவதாக நியூ சௌத்வேல்ஸ் முதலமைச்சர் டோமினிக் பெர்ரோட்டே கூறினார்.
12இலிருந்து 15 வயதுக்கு உட்பட்ட 30 வீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.




