இலங்கை தமிழ் அரசு கட்சியின், எம்.ஏ.சுமந்திரன் அணி அழைப்பு விடுத்த கடல்வழி போராட்டம் இன்று (17) முல்லலைத்தீவில் ஆரம்பித்தது. சுமந்திரன் அணியுடன், சிறிதரன் அணியும் இணைந்து படகுப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
வடக்கு மீனவர்களின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடியை தடைசெய்ய முடியாமலிருப்பதற்கு, இந்திய மீனவர்களின் அத்துமீறலே தடையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவை பகைக்காமல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான போராட்டம் என எம்.ஏ.சுமந்திரன் ஒரு படகுப் போராட்டத்தை அறிவித்தார்.
இதற்காக வடக்கிலுள்ள மீனவர் அமைப்புக்களுடன் கலந்துரையாடப்பட்டிருக்கவில்லை.
இன்று முல்லைத்தீவில் இருந்து புறப்பட்ட படகுகளில் அமைச்சர் டக்ளசிற்கு எதிரான கோசங்கள் எழுப்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அங்கு கூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். இதனால் ஏற்பட்டாளர்கள் தர்மசங்கடமடைந்ததாக அறிய வருகிறது.
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறலிற்கு எதிரான போராட்டம் என கோசங்களை எழுப்பி வருகிறார்கள்.
ஆனால், ஏற்பட்டாளர்கள், இழுவை மடி தடைச்சட்டத்தை அமுல்ப்படுத்தாமலுள்ள அமைச்சர் டக்ளசிற்கு எதிரான போராட்டம் என குறிப்பிட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தரப்பிற்கு, ஆரம்பத்தில் அறிவிக்கப்படாமலிருந்தாலும், சிறிதரனும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இதுதவிர, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கிய ராகுல இராஜபுத்திரன் உள்ளிட்டவர்களும் படகுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 50 படகுகளில், 300 பேர் பயணம் செய்கிறார்கள்.
இந்த படகு பயணத்தில் ஈடுபடும் படகுகளிற்கான எரிபொருள் செலவையும் போராட்ட ஏற்பாட்டாளர்களே வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.