அடுத்த ஆண்டு முதல், முதலாம் தரத்துக்கு மாணவர்களை உள்ளீர்ப்பது குறித்து முடிவு எடுப்பதற்காக நடத்தப்படும் பிள்ளைகளை சேர்ப்பிக்கும் நேர்காணல்களை நடத்துவதற்கான காலக்கெடுவை கல்வி அமைச்சு திருத்தியுள்ளது.
அதன்படி, நவம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் நேர்காணல் நடத்தப்பட வேண்டும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் தற்காலிக பட்டியலை நவம்பர் 30ஆம் திகதிக்கு அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், மேல்முறையீடுகளை ஏற்றுக்கொள்வதற்கான திகதி டிசம்பர் 14 ஆகும்.
அந்த திகதியில் இருந்து 28ஆம் திகதி வரையான இரண்டு வாரங்களுக்குள், மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
இறுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் இறுதிப் பட்டியல், ஜனவரி 14ஆம் திகதியன்று வெளியிடப்பட வேண்டும்.
இந்த திருத்தங்கள் மாகாண, வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று, கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக பாடசாலைகளை மூட வேண்டியிருந்ததால், இந்த காலக்கெடு திருத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
முந்தைய சுற்றறிக்கையின்படி, இந்த ஆண்டுக்குள் அனைத்து தேர்வு செயல்முறையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.