ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டு முன் பெண் தீக்குளிக்க முயன்றார்.
நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு வந்தார். அப்போது அந்த வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் ஊழியர் பர்சானா (26) ஆர்வ மிகுதியால் தனது செல்போனில் அஜித்குமாரை வீடியோ எடுத்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, வதந்தி பரவியதால் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுடன் புகைப்படம் எடுப்பதும், அதை வலைதளங்களில் பரப்புவதும் தவறு என கூறி, வைத்தியசாலை நிர்வாகம், பர்சானாவை பணியிடை நீக்கம் செய்தது. இதை கேள்விப்பட்ட அஜித்குமாரின் மனைவி ஷாலினி, வைத்தியசாலை நிர்வாகத்திடம் பரிந்துரை செய்ததால் பர்சானா மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாகவும், ஆனால் சிறிது நாட்களிலேயே மீண்டும் பர்சானா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் கொரோனா ஊரடங்கின்போது போதிய வருமானம் இன்றி குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலையால் பரிதவித்த பர்சானா, அஜித்குமாரின் மேலாளரை சந்தித்து தனக்கு மீண்டும் வைத்தியசாலையில் வேலை கிடைக்க அஜித்குமாரிடம் பேசி உதவுமாறு கேட்கும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று மாலை பர்சானா, சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டு வாசலில் நின்று கொண்டு திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடனடியாக அங்கிருந்த நீலாங்கரை போலீசார் அவரை தடுத்தனர். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். அப்போது பர்சானா, “எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அஜித்குமாரை சந்திக்காமல் இங்கிருந்து போக மாட்டேன். ஒரு வருடமாக என் வாழ்க்கையில் ஒரே போராட்டமாக உள்ளது” என்றார்.
இதையடுத்து போலீசார் அவரையும், அவருடன் வந்த மற்றொரு பெண்ணையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.