கட்டாரில் நேற்று (2) நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட 26 பெண்களில், ஒருவர்கூட வெற்றி பெறவில்லை.
வாக்காளர்களின் முடிவு ஏமாற்றமளிப்பதாகப் போட்டியிட்ட பெண்கள் சிலர் கூறினர்.
கட்டாரில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
Shura ஆலோசனை மன்றத்தில் உள்ள 45 இடங்களுக்கு 30 உறுப்பினர்களைத் தெரிவுசெய்யத் தேர்தல் நடந்தது. இதர 15 பேரைக் கட்டாரின் தலைவர் நியமிப்பார்.
ஆனால், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பேரும் ஆண்களே.
பெண்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்றும் எதிர்காலத்தில் கட்டார் பெண்கள் வலுவான பெண் போட்டியாளர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்றும் பெண் போட்டியாளர் ஒருவர் வலியுறுத்தினார்.
அண்மை ஆண்டுகளில் கட்டாரில் பெண் உரிமைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
எனினும், அங்குத் தொடர்ந்து நடப்பில் இருக்கும் பாதுகாவலர் அமைப்பு குறைகூறல்களுக்கு இலக்காகியுள்ளது.
அந்த அமைப்பின்கீழ், பெண்கள் திருமணம் செய்யவோ, பயணம் செய்யவோ ஆண்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.