உலக குத்துச்சண்டை லெஜண்ட் மன்னி பாக்கீயோ தனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய சண்டையான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் கவனம் செலுத்துவதற்காக “உலகின் மிகச்சிறந்த விளையாட்டு” என்று அழைக்கப்பட்ட குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (29) அறிவித்தார்.
அடுத்த ஆண்டு பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.
தமது அரசியல் வாழ்க்கையின் ஆகப் பெரிய போட்டியில் கவனம் செலுத்துவதற்காகக் குத்துச்சண்டையிலிருந்து ஓய்வுபெறுவதாக பேஸ்புக் பக்கத்தில் பக்கீயோ தெரிவித்தார்.
26 ஆண்டுகால குத்துச்சண்டை வாழ்க்கையில், குத்துச்சண்டையின் 8 வெவ்வேறு எடைப் பிரிவுகளில் வெற்றிபெற்றுள்ள உலகின் ஒரே வீரர் என்ற பெருமை அவரைச் சேரும்.
42 வயது பக்கீயோ தற்போது செனட்டராக உள்ளார். நேற்று வெளியிட்ட வீடியோவில், “நான் இறுதி மணியைக் கேட்டேன். குத்துச்சண்டை முடிந்துவிட்டது” என்றார்.
பாக்கீயோவின் இளமைக்காலம் மிக போராட்டமானது. வறிய குடும்பத்தில் பிறந்த அவர், தெருக்களிலேயே கணிசமான பொழுதை கழித்தார். ஒரு கப்பல் பணியாளராக மாறி, பின்னர் குத்துச்சண்டைக்குள் நுழைந்தார். ஒரு சண்டையில் வெற்றியீட்டினால் 2 டொலர் பரிசு என்ற குறைந்த மட்ட ஊதியத்தில் விளையாட ஆரம்பித்தவர், பின்னர் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறினார்.
முஹம்மது அலியை விட, சிறந்த தாக்குதல் ஆட்டக்காரராக அவர் பரவலாக மதிப்பிடப்பட்டுள்ளார்.
அவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 63 மில்லியன் டொலர்கள் என்று பிலிப்பைன்ஸ் சொத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.