யாழ்ப்பாணத்திற்கான விமர்சனத்திற்குரிய இரண்டு குடிநீர்த் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பல தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் இதிலொன்று.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில், ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி, மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக இந்த தொடக்க நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் – தாளையடியில் நிர்மாணிக்கப்படும் SWRO கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் தொடக்கி வைக்கப்பட உள்ளதுடன்,
நயினாதீவில் முழுமையாக நிறைவுசெய்யப்பட்ட நீர் விநியோக திட்டமும் திறந்து வைக்கப்படவுள்ளது.
நயினாதீவு திட்டத்தின் மூலம் 5000 பயனாளர்களுக்கு சுத்தமான நீர் வழங்கப்படவிள்ளது.
இதே வேளை, தாளையடியில் நிர்மாணிக்கப்படும் SWRO கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தின் நீட்சியாக – ஒரு இலட்சம் மக்களைப் பயனாளர்களாக உள்ளடக்கும் வகையில்,
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டத்தின் கீழ்,
284 கிலோமீற்றர் தூரத்திற்கு குழாய்களை அமைக்கும் திட்டம் உள்ளடக்கிய – யாழ் மாநகர விநியோக திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
யாழ் மாநகர விநியோகம் மற்றும் தாளையடி SWRO திட்டங்கள் 2023ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்படுவதுடன், இதனூடாக மூன்று இலட்சம் பயனாளர்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், யாழ்ப்பாணத்தின் நீர்வளத்தை அதிகரித்து, எதிர்கால சவால்கள் இல்லாத வேறு பல குடிநீர்த்திட்டங்கள் நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், அரசு அவற்றை கணக்கிலெடுக்கவில்லை.
ஆறுமுகம் திட்டம், பாலியாறு திட்டம், வல்வை குடிநீர் திட்டம் என்பவற்றின் மூலம் நீடித்த மற்றும் குடாநாட்டின் நீர்வளத்தை மேம்படுத்தும் திட்டங்கள் முன்மொழியப்பட்டிருந்தன. பாலியாற்று திட்டத்தை முன்னெடுக்க வடமாகாணசபை அங்கீகரித்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் வல்வை குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
எனினும், அவற்றை புறந்தள்ளி தாளையடி குடிநீர்த் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்கிறது.
தாளையடி குடிநீர் திட்டத்தின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த நல்லாட்சி அரசில் தாளையடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இரகசியமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதன் திட்ட வரைபின்படி, குடிநீருக்கான அதிக உற்பத்தி செலவை, அப்பொழுது தமிழ்பக்கம் சுட்டிக்காட்டியிருந்தது.
புதிய திட்டத்தின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
எனினும், இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீரைப் பெற்றுக்கொள்வதால் கிளிநொச்சி விவசாயிகள் எதிர்கொள்ளும் பாதிப்புக்களிற்கு தீர்வை முன்மொழியாமல், “வைத்தால் குடும்பி, அடித்தால் மொட்டை“ பாணியில், இரணைமடு அல்லது தாளையடி கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டம் என்பதை போல அரசு முடிவெடுத்துள்ளதை போல தென்படுகிறது.