லங்கா சதொசாவுக்கு சொந்தமான 54,000 கிலோகிராம் வெள்ளைப் பூண்டு அடங்கிய இரண்டு கொள்கலன்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து அகற்ற உதவியதாகக் கூறப்படும் ஒரு தொழிலதிபரை வெலிசர நீதவான் ஹேஷாந்த டி மெல் இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்தார்.
எஸ்.கே ரேடர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் வேலாயுதம் சிறிதரன் என்ற தொழிலதிபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் நம்பிக்கை மீறல், தகவலை மறைத்தல் மற்றும் சட்டவிரோதமாக பொருட்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் பேலியகொட காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு தொழிலதிபரை கைது செய்தது.
இதேவேளை, நேற்றைய விசாரணையின் போது, இந்த சம்பவத்தின் உண்மையான குற்றவாளியை கைது செய்யாமல், அவரது வாடிக்கையாளரையே பொலிசார் கைது செய்துள்ளார், குற்றம் தொடர்பான அறிவுடன் அவர் செயற்பட்டிருககவில்லையென வேலாயுதம் சிறிதரன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
பூண்டு சம்பவம் தொடர்பாக பேலியகொட பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்ட லங்கா சதொச நிதி பிரிவின் துணை பொது மேலாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




