எதிர்வரும் நாள்களில் கொவிட் 19 நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடாத்துவது பற்றி அன்றைய நாளில் சாதகமாகப் பரிசீலிக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35 வது பொதுப் பட்டமளிப்பு விழாவை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதி முதல் மூன்று நாள்களுக்கு நடாத்துவதற்கான அனுமதி கோரி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரால் அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக்கான பதில் கடிதத்திலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன இன்று மாலை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு அமைய அனைத்து விதமான ஒன்று கூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதனால் தங்களின் கோரிக்கையின் படி நிகழ்வை நடாத்துவதற்கு அனுமதிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். எனினும் எதிர்வரும் நாள்களில் கொவிட் 19 நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடாத்துவது பற்றி அன்றைய நாளில் சாதகமாகப் பரிசீலிக்கப்படலாம் என்றும், நிகழ்நிலையில் பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.