கடவுள்களுக்கே முரண்பாடுகள் உள்ளபோது கட்சிகளுக்குள் இல்லாமல் போகுமா?: பா.அரியநேத்திரன்

Date:

முரண்பாடுகள், ஒத்த கருத்துகள், கருத்தொற்றுமை மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுள்களிடமும் இருந்ததுதான் கடவுள் இடத்திலே முரண்பாடுகள் உள்ளபோது கட்சிகளிடையே முரண்பாடுகள் இல்லாமல் போகுமா என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்பை தமிழரசு கட்சி்தலைவருமான பா.அரியநேத்திரன்.

ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக ஒரு கடிதம் அனுப்பவில்லை பலரும் வெவ்வேறு விதமாக கடிதங்களை அனுப்பியது உங்களிடம் கருத்தொற்றுமை இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறதே என ஊடகவியலாளர் கேட்டபோது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவபெருமானும், உமாதேவியாரும் தமது பிள்ளைகளான பிள்ளையாரையும் , முருகப்பெருமானையும் அழைத்து முதலில் உலகை சுற்றிவருபவருக்கு மாம்பழம் பரிசாக தருகிறோம் என்றனர். அப்போது பிள்ளையார் சிவனையும் உமை அம்மையையும் சுற்றிவந்து தாயும் தந்தையுமே உலகம் என்றார் அவருக்கு மாம்பழம் பரிசாக கிடைத்தது.

ஆனால் முருகப்பெருமான் மயில்மீது ஏறிஅமர்ந்து ஊர் உலகம் வனந்தரம் எல்லாம் சுற்றி அதுவே உலகம் என்றார்.

இதில் பிள்ளையாரான தமையனுக்கும், முருகப்பெருமானான தம்பிக்கும் கருத்தொற்றுமையோ, செயல் ஒற்றுமையோ இருக்கவில்லை. முரண்பாடான முடிவுகள் வெளிப்பட்டன. இது கடவுளுக்கே ஒற்றுமையான ஒரு முடிவுகளை எடுக்கமுடியாது என்பதை வெளிக்காட்டுகிறது அல்லவா. அப்படி எனில் எப்படி மனிதர்களுக்கு ஒற்றுமையாக ஒரு முடிவுக்கு வரமுடியும் என்பதை சிந்தியுங்கள்.

தமிழ்தேசியகூட்டமைப்பு 2001 அக்டோபர் 20ஆம் திகதி உருவாக்கப்பட்டு 2001, டிசம்பர்,09 ம் திகதி இடம்பெற்ற முதலாவது தேர்தல் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில்தான் வடக்கு கிழக்கு மகாணத்தில் போட்டியிட்டு 18 ஆசனங்களை பெற்றது.

ஆனால் 2004 ஏப்ரல் 8 இல் இடம்பெற்ற இரண்டாவது தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிட வில்லை அல்லவா?

ஆனந்த சங்கரி ஐயா தமது கட்சி தமிழர் விடுதலை கூட்டணிகட்சியையும் அதன் சின்னத்தையும் தர மறுத்து சென்றதால்தானே இலங்கை தமிழரசு கட்சியில் வீட்டுச்சின்னத்தில் அந்த தேர்தலில் போட்டியிட்டு 22 ஆசனங்களை பெற்றோம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து முதலாவதாக பிரிந்து சென்ற வரலாறு தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் செயலாளர் ஆனந்தசங்கரி ஐயாவையே சாரும். அவர்தான் முதல் முதல் ஒற்றுமையை கெடுத்தவர். இந்த வரலாறு பலருக்கு தெரியாது.

அவர் முரண்பட்டு உதயசூரியனுடன் பிரிந்து சென்றாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தளர்வு அடையவில்லை. இலங்கை தமிழரசு கட்சி வீட்டுச் சின்னம் மூலம் தொடர்ந்து பயணித்தது பயணித்துக் கொண்டே இருக்கிறது.

2009 மே 18 முள்ளிவாய்க்கால் போர் மௌனத்திற்கு பின்னரே 2010 ஏப்ரல் 8ஆம் திகதி தேர்தலுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பத்மினி சிதம்பரநாதன், செ.கஜேந்திரன் ஆகியோர் இரண்டாவதாக பிரிந்து சென்றார்கள்.

2001இல் அடம்பிடித்த புளொட் கட்சி 2009 மே 18 முள்ளிவாய்க்கால் போர் மௌனத்திற்கு பின்னர் இரண்டு வருடங்கள் கடந்து 2011இல் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்வாங்கப்பட்டது.

2013இல் மீண்டும் ஆனந்த சங்கரி ஐயாவுக்கு ஒன்றுமே செய்ய முடியாமல் ஞானம் பிறந்து தமிழர் விடுதலை கூட்டணி வட மகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டு தேர்தலில் ஆனந்த சங்கரி ஐயா வெற்றி பெறாமையால் பின்னர் தானாக மழைக்கு முழைத்த காளான் போல் ஒதுங்கிவிட்டார்.

2020 ஓகஸ்ட் 5 தேர்தலுக்கு முன்னதாக ஈபீஆர்எல்எவ், சுரேஷ் பிரமச்சந்திரன் உள்ளிட்ட கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகினர். இது தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகிய மூன்றாவது கட்சியாகும். வேறு ஒரு அணியாக வடமாகாண சபை முதலமைச்சராக இருந்த சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா, ஶ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் என பலரும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்தனி கட்சிகளை அமைத்து செயல்பட்டனர்.

தற்போது அவர்கள் மீண்டும் ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென்ற கருத்தும் அவர்களிடம் உள்ளது. அது நல்ல விடயம். அது ஒரு புறம் இருக்க தற்போது ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பிலும், இலங்கை தமிழரசு கட்சிக்குள்ளும் ஒற்றுமையாக ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் கடிதம் அனுப்பவில்லை. இதனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிளவு, பிரிவு ஏற்பட்டதாக பல ஊடகங்களிலும் பல அரசியல் தலைவர்களும், ஆய்வாளர்களும் கருத்துக்களை தெரிவிப்பதை காண முடிகிறது.

அவ்வாறு எந்த சந்தர்பத்திலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரிந்து செல்லவில்லை. ஆனால் கருத்தொற்றுமை இல்லை என்பதால் வெவ்வேறாக கடிதங்கள் அனுப்பியதை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.

சம்மந்தன் ஐயா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் , மாவை சேனாதிராசா ஆகிய தலைவர்களும் தாம் எக்காரணம் கொண்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற வில்லை என்பதையே கூறியுள்ளனர்

கருத்து முரண்பாடு ஒரு ஜனநாயக கட்சிகளிடையே வருவது வழமை. அதை சீர் செய்து தமிழ்தேசிய அரசியல் பணி தொடரும் எனவும் மேலும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு...

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்