ஒஸ்திரியாவைச் சேர்ந்த ஒருவர் தனது தாயாரின் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்காக, தாயாரின் மரணத்தை மறைத்து, அவரின் உடலை வீட்டின் அடித்தளத்தில் உள்ள ஓர் அறையில் ஒரு வருடத்திற்கும் மேல் பதப்படுத்தி வைத்திருந்துள்ளார்.
மேற்கு ஒஸ்திரியாவில் உள்ள டைரோலைச் சேர்ந்த 66 வயதான அடையாளம் தெரியாத நபரின், தனது 89 வயதான தாய் 2020 நடுப்பகுதியில் வீட்டில் இறந்துள்ளார். தாயார் இறந்தது தெரிய வந்தால் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு விடும், அதன்பின் வாழ்க்கை நெருக்கடியாகி விடும் என நினைத்த அவர், தாயாரின் உடலை இரகசியமாக பாதுகாத்து வந்துள்ளார்.
தாய்க்கு ஞாபக மறதி இருப்பதாக நம்பப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
தாயின் உடலை ஐஸ் கட்டிகளில் பேணி துர்நாற்றம் வராதபடி செய்து, பின்னர் பிணம் மம்மியாக்கப்பட்டது என்று நகர பொலிஸ்அதிகாரி குஃப்லர் கூறினார்.
விசாரணையின் போது சந்தேக நபர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதன்கிழமை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது மற்றும் பெண்ணின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று டைரோல் பொலிசார் செய்தி வெளியீட்டில் தெரிவித்தனர்.
அந்த நபர் தனது தாயின் மரணத்தை மறைத்து சுமார் 50,000 யூரோக்களை சேகரித்திருப்பதாக போலீசார் மதிப்பிடுகின்றனர். சந்தேகநபருக்கு வேறு வருமானம் இல்லை என்றும், தாயார் இறந்ததாக அறிவித்திருந்தால் அவரது தாயின் மாதாந்திர சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் குஃப்லர் கூறினார்.
வழக்கமாக பணம் வழங்கும் தபால்காரர் மாற்றமடைந்து, புதியவர் பணிக்கு வந்தபோது, பணத்தை பெறும் பயனாளியைப் பார்க்க வேண்டுமென குறிப்பிட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் வந்தது.



