கியூபாவில் உலகிலேயே முதன்முறையாக 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளிற்கு தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது பெரும்பாலான நாடுகள் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கியூபாவில் தொடங்கியுள்ளது.
அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனை முடிவடைந்தையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு செலுத்தும் பணியை கியூபா தொடங்கியது. இந்த சூழலில், திங்கள் கிழமை முதல் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியுள்ளது. கியூபாவின் மத்திய மகாணமான சியன்பியூகோஸ் பகுதியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் பணியை தொடங்கியுள்ளது.
சீனா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசூலா ஆகிய நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தாலும், கியூபாவில் முதன் முறையாக செலுத்தப்பட்டுள்ளது.
கியூபாவில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.