உலகச் சுகாதார நிறுவனம், ‘மூ’ (Mu) எனப்படும் புதிய வகைக் கொரோனா வைரஸ் பிறழ்வை கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
அண்மையில் கண்டறியப்பட்ட B.1.621 பிறழ்வு தடுப்பூசியாலும் கட்டுப்படுத்த முடியாத பேரழிவை ஏற்படுத்துமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த பிறழ்வு முதலில் கொலம்பியாவில் ஜனவரியில் கண்டறியப்பட்டது.
மூ பிறழ்வு, மேலும் பல பிறழ்வுகளிற்கு உள்ளாகக்கூடும் என்றும், அதற்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருக்குமென்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும் மு வை பற்றி மேலும் அறிந்துகொள்ள இன்னும் கூடுதலான ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று அது குறிப்பிட்டது.
உலகச் சுகாதார நிறுவனம் தற்போது 4 அக்கறைக்குரிய கொரோனா வைரஸ் பிறழ்வுகளை அடையாளம் கண்டுள்ளது.
அதில் ஒன்றான அல்ஃபா 193 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.மற்றொன்றான டெல்ட்டா பிறழ்வு இலங்கை உள்ளிட்ட 170 நாடுகளில் பரவி வருகிறது.
மூ உள்ளிட்ட இதர பிறழ்வுகள் கண்காணிக்கப்படுகின்றன.
கொலம்பியாவைத் தொடர்ந்து ஏனைய தென்னமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பாவிலும் மூ வகை பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளது.
உலக அளவில் பதிவான தொற்றுக்களில் மூ பாதிப்பு 0.1 விழுக்காட்டுக்கும் குறைவே என்று நிறுவனம் தெரிவித்தது.
இருப்பினும், கொலம்பியாவில் பதிவான தொற்றாளர்களில் மூ வினால் 39 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.